சங்கரன்கோவில் அருகே அரசு மருத்துவருக்கும் அவரது குடும்பத்திற்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் எனவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்,  எஸ்பியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் பேசி வீடியோ வெளியிட்ட அரசு மருத்துவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அரசு மருத்துவராக மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மக்கள் மத்தியில் நன்மதிப்பை  பெற்றவர்.அரசு மருத்துவரின் தாத்தா மரிய மனோகரன் என்பருக்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைத்தது தொடர்பாக அருகில் உள்ளவர்கள் மருத்துவரின் அம்மாவை தாக்கி வேலியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனால் பலத்த காயமடைந்த மருத்துவரின் தாய் முத்தம்மாள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேதப்படுத்தப்பட்ட கம்பிவேலி

இதே போல் கடந்த மாதம் திமுக பெண் கவுன்சிலர், அருவடைய கணவரும் சேர்ந்து மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவர் முத்துக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகளும் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி, சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் மருத்துவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்தது.அரசு மருத்துவர் முத்துக்குமார் தன் கிராமத்தை சார்ந்தவர்களும் உறவினர்களும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இதனால் என்னுடைய குடும்பத்தினருக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இயற்கை பேரிடர் காலங்களிலும், கொரோன காலத்திலும் பல்வேறு உயிர்களை காப்பாற்றிய அரசு மருத்துவராகிய என் உயிருக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைப்பதற்கான உரிமம் வழங்க வேண்டும் என மாவட் ஆட்சியர், மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்க  திட்டமிட்டுள்ளதாக  அரசு மருத்துவர் பேசி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக சேர்ந்தமரம் காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாகவும் விசாரணை செய்யாமல் இரண்டு தரப்பு புகார் மனுவினையும் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

பொதுமக்களின் உயிரை காப்பாற்றக் கூடிய அரசு மருத்துவருக்கு அவருடைய உயிரை பாதுகாக்க துப்பாக்கி வைக்க உரிமம் வேண்டும் என கேட்டுள்ளது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது?