கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் மருத்துவமனைகள் குறைந்தது 100 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சுமார் 250 பேர் இதுவரை மீட்கப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மேலும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறதுசெவ்வாய்கிழமை அதிகாலை 2-3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி மற்றும் சூரல்மலை அருகே செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதாக ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இம்மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த நிலச்சரிவால் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளன.இதுவரை, உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றும் ஏறத்தாழ 250-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வயநாட்டில் தொடர் கதையாகும் நிலச்சரிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மலை மாவட்டமான வயநாட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், பழங்குடி மக்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். வடக்கே கர்நாடகாவின் குடகு மற்றும் மைசூர் மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் தமிழகத்தின் நீலகிரி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.வடமேற்கே கண்ணூர் மாவட்டமும், தெற்கே மலப்புரம் மாவட்டமும், தென்மேற்கே கோழிக்கோடு மாவட்டமும் அமைந்துள்ளது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முண்டக்கை, அட்டமலை, குன்னோம் போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த கிராமங்கள் தனித்துவிடப்பட்டுள்ளன. மழைகாலங்களில் நிலச்சரிவு அதிகம் ஏற்படும் பகுதியாக இந்த மாவட்டம் அறியப்படுகிறது.
தாமதமாகும் மீட்புப் பணிகள்
சூரமலையில் இருந்து முண்டக்கையை இணைக்கும் பாலமானது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாக கேரள வனத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் சசீந்திரன் கூறியுள்ளார்.”தற்போது இருக்கும் சூழலில் எவ்வளவு பேர் இந்த இடர்பாடுகளில் சிக்கியிருக்கிறார்கள் என்று கூற இயலாது,” என்பதையும் அவர் தெரிவித்தார். கேரள முதல்வர் அலுவலகம் இது குறித்து கூறுகையில், தற்காலிகமாக பாலம் அமைக்க ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பாலம் அமைத்த பிறகு, மீட்பு குழுவினர் அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள தேயிலை தோட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், விமானப்படை விமானங்கள், கண்ணூர் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் அனைத்து மீட்புப் பணிகளும் தாமதமாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதற்கிடையே அங்கே எல்லையில் மழை இப்போது எப்படி இருக்கிறது.. வரும் நாட்களில் மழை தொடருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவின் குடகு, ஹாசன், சிக்மகளூர், கேரளா, நீலகிரி, வால்பாறை, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும்.
இவ்வளவு பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. கனமழை பெய்யும் என எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான். ஆனால் எப்படியோ கேரளா, வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை மேகங்கள் தொடர்ந்து இருக்கின்றன. கேரளாவில் பருவமழை தொடங்கியது முதல் பெய்த அதிதீவிர கனமழை என்றால் அது இதுதான். வால்பாறை அணைகள் மற்றும் நீலகிரி அணைகளில் அதிக நீர்வரத்து உள்ளது. கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார். பொதுவாக மழை வரும் போது கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மழை மேகங்கள் வலுவிழக்கும். அதன் பிறகு மற்றொரு மழை மேகங்கள் உருவாகும்.. ஆனால், இப்போது அப்படி இல்லை மழை மேகங்கள் வலுவிழக்கவில்லை. கனமழை தொடர்ந்து பெய்தே வந்துள்ளது.. இது அரிய நிகழ்வு என்று குறிப்பிட்ட வெதர்மேன், நிலச்சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்
உதவி மைய எண்கள் அறிவிப்பு
மீட்பு உதவிகள் தேவைப்படும் மக்கள் 1077 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு.மேலும் மாவட்ட அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 204151 என்ற எண்ணுக்கும், 9562804151, 8078409770 என்ற அலைபேசி எண்களுக்கும் மக்கள் அழைக்கலாம். சுல்தான் பத்தேரியில் உள்ள தாலுக்கா அளவிலான அவசர செயல்பாட்டு மையத்தை 04936 223355 (அ) 04936 220296 என்ற எண்ணிலும் அழைக்கலாம். மேலும் 6238461385 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.மந்தவாடி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04935 241111, 04935 240231 என்ற எண்களிலும், 9446637748 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். வைத்திரி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 256100 என்ற எண்ணிலும், 8590842965, 9447097705 என்ற அலைபேசி எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
நிவாரண நிதியை அறிவித்த மத்திய அரசு
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 2 லட்சத்தை நிதி உதவியாக அறிவித்துள்ளது மத்திய அரசு.பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தீவிர கனமழை இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மற்றும் வடக்கு கேரளாவில் அதிக கன மழைகான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் 204 மிமீ அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் வடக்கு கேரளா பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு (Flash Flood) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் கரையை ஒட்டி தாழ்வு பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர்கள் மேற்பார்வையில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, முழு அரசு இயந்திரமும் மீட்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்றும் கேரள முதல்வர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தலைவர்கள் ஆறுதல்
”வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்” என ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – பிரதமர் மோடி
கேரளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த தகவல் கேட்டு மிகவும் வேதனையுற்றதாக குறிப்பிட்டுள்ளார். “உறவுகளை இழந்த நபர்களைப் பற்றி நினைக்கிறேன். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார் மோதி.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.”கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அலைபேசியில் உரையாடினேன். இந்த தருணத்தில் அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தேன்,” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோதி.
உதவிக்கரம் நீட்ட தயார் – தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசு கேரளத்திற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய தயார் என்று அறிவித்துள்ளார்.”வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் குறித்து வேதனையுற்றேன். இந்த பகுதியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று புரிந்து கொள்கிறேன். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது என்றும் இடர்பாடுகளில் சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.மேலும் தேவையான தளவாட, மனிதவள உதவிகளையும் இந்த இக்கட்டான தருணத்தில் சகோதர மாநிலமான கேரளத்துக்கு வழங்க தமிழகம் தயாராக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.