திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் செய்த பணத்தில் ரூபாய் 4 கோடியே 66 லட்சத்தை அதிகாரிகள் கையாடல் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்த நிலையில், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த மோசடிக்கு போலி ஆவணங்கள் தயாரித்ததாக அரசு இ-சேவை மைய உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை முருகன் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த போது இறந்த காரணத்தினால் வாரிசு அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகராட்சி இளநிலை உதவியாளராக சரவணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் வீட்டு வரி, குழாய்வரி, பாதாள சாக்கடை வரி, போன்றவற்றிற்கான தொகையை நாள்தோறும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து கட்டு வது வழக்கம். பொதுமக்கள் செலுத்துகின்ற பணத்தை வசூல் செய்யும் ஊழியர்கள் சரவணனிடம் அதற்கான கணக்குகளை ஒப்படைப்பது வழக்கம். நாள்தோறும் வசூல் ஆகக்கூடிய பணத்தை உதவி ஆணையர், உதவி கணக்கு அலுவலர், மற்றும் கணக்காளர் ஆகியோரிடம் கணக்கை காட்டி வங்கியில் செலுத்தக்கூடிய செலானில் (CHALAN) கையொப்பம் பெற்று வங்கியில் சரவணன் செலுத்த வேண்டும். ஆனால் நாள் தோறும் வசூலாகும் பணத்தை கணக்குபடி முழுவதுமாக வங்கியில் செலுத்தாமல் சரவணன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. வசூல் பணத்திலிருந்து தனக்குத் தேவையான தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை வங்கியில் செலுத்தி உள்ளார். வங்கியில் பணம் செலுத்தும் செலானில் (CHALAN) மூன்று அதிகாரிகளின் கையெழுத்துக்களையும் போலியாக போட்டு தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு மீதி தொகையை கட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி பல நாட்களாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மாநகராட்சி வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சரவணனிடம் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தணிக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் ரூ 4 கோடியே 66 லட்சம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சரவணனை பணியிட நீக்கம் செய்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் சரவணன் பணி காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் சரவணன் பணிக்காலம் முழுவதும் ஆய்வு செய்யும்படி உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனருக்கு ஆணையர் ரவிச்சந்திரன் கடிதம் எழுதி உள்ளார். இதைத் தொடர்ந்து வரி வசூல் மற்றும் வங்கியில் பணத்தை செலுத்துவதை முறையாக கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த மோசடிக்கு போலி ஆவணங்கள் தயாரித்ததாக அரசு இ-சேவை மைய உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய உரிமையாளர் ரமேஷ் ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது வேதாந்திரிநகரைச் சேர்ந்த ரமேஷ்ராஜா என தெரிந்தது. இவர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். ரமேஷ்ராஜாவும், சரவணனும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்தே இம்மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரமேஷ் ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இவர் மீது விருதுநகரில் தனியார் வங்கியில் வேலை செய்த போது நகை கையாடலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.