பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தந்தை – மகன் மோதல் உச்சத்தை எட்டிய நிலையில், பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி அதிரடியாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். வரும் 2026 தேர்தலை மனதில் கொண்டே இந்த முடிவை தான் எடுப்பதாகவும், இனி கட்சிக்கு நானே தலைவர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமிப்பதாகவும், இனி அன்புமணி அந்த பதவியிலே இருப்பார் என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த பாமக பொதுக்குழுவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி நியமனம் தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது. அதில், நான் சொல்வதைதான் கேட்கவேண்டும், இது என் கட்சி என்று ராமதாஸ் அறிவித்தார். அதன்பிற்கு இருவருக்கும் இடையே கடுமையான முறையில் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த திடீர் முடிவை அறிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாமகவுக்கு நான் தான் தலைவராக இருப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார்.எனவும் பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என கூறினார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி ஆசை எனக்கு இருந்ததில்லை என தெரிவித்தார். மேலும் கூட்டணி குறித்த விஷயங்களுக்கு நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுப்போம் எனவும். அன்புமணி நீக்கம் செய்யப்படதற்கான காரணங்கள் பின்னர் தெரிவிப்போம் என ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “பாஜக கூட்டணி குறித்து செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும். அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்கள் உண்டு.” எனத் தெரிவித்துள்ளார்.