மத்திய அரசின் ‘பி.எம் கிசான் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இன்று (திங்கட்கிழமை) விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 24) விடுவிக்க உள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மிக முக்கியமானது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளின் நிதி தேவைகளுக்கு உதவ மத்திய அரசால் நடத்தப்படும் திட்டம். இதில் தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. 2 ஹெக்டேர் வரையிலான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிஎம் கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது. அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது. விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு தவணைத் தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பி.எம் கிசான் திட்டத்தின் 19வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். 18வது தவணை பிரதமர் மோடியால் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்டது. 18வது தவணைத் தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் தற்போது ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், 19-வது தவணையான இந்த உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 24) விடுவிக்கவுள்ளார். பீகார் மாநிலம், பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்கவுள்ளார். முன்னதாக இந்த உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது விவசாயிகள் தங்கள் மொபைலில் PM கிசான் யோஜனா செயலியின் உதவியுடன் E-KYC மேற்கொள்ளலாம். இந்த செயலியின் உதவியுடன், விவசாயிகள் OTP அல்லது கைரேகை இல்லாமல் முக அங்கீகார அம்சத்தின் மூலம் வீட்டில் இருந்தபடியே e KYC-ஐ எளிதாகச் செய்து முடிக்கலாம்.