மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் “வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி” நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார்.”இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காதது, மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவைத் ‘திருட’ பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதற்கான சான்றாகும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையம்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ‘தவறாக வழிநடத்துவதாக’ இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், அவர் தனது புகாரை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தான் சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டும், அல்லது அவர், இந்திய மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார்.”ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார், பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாகக் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்யான தகவல்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்” என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆதாரங்களை ராகுல் காந்தி வழங்கினார்.வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய முக்கிய கூற்றுக்கள் பற்றிய ஒரு பார்வை.

1: ‘மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி’ குற்றச்சாட்டு

முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்:

மகாராஷ்டிராவில், ஐந்து மாதங்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதற்கான சந்தேகத்தை எழுப்பியது, இந்த சந்தேகத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிரங்கமாகக் கூறியிருந்தோம்.

மகாராஷ்டிராவின் மக்கள் தொகையை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, வாக்கு சதவிகிதத்தில் திடீரென ஒரு பெரிய ஏற்றம் ஏற்பட்டது.

சட்டமன்றத் தேர்தல்களில் எங்கள் கூட்டணி முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணி வெற்றி பெற்றது. இது மிகவும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது.

மாநில அளவில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதைக் கண்டோம். இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தோம்.

மாநிலத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

வாக்காளர்கள்

2: கர்நாடகா தேர்தல் குறித்து ராகுல் காந்தி என்ன சொன்னார்?

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள்:

கர்நாடக மக்களவைத் தேர்தலில், உள் கருத்துக் கணிப்புகள் 16 இடங்களை வெல்லும் என்று கணித்திருந்தன, ஆனால் காங்கிரசுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் மொத்த வாக்காளர்கள் இருப்பதை தங்கள் ஆய்வில் காங்கிரஸ் கண்டறிந்தது.

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில், 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் ‘திருடப்பட்டுள்ளன’.

வெவ்வேறு வாக்குச்சாவடிகளிலும் வெவ்வேறு மாநிலங்களிலும் வாக்களித்த சுமார் 11 ஆயிரம் வாக்காளர்கள் கர்நாடகாவில் வாக்களித்தனர்.

இந்த வாக்காளர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி எண்கள் மற்றும் முகவரிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது.

3: ‘போலி வாக்காளர்’

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு:

பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும், கிழக்கு லக்னௌவிலும், மும்பையில் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

தனது ஆய்வுக் குழு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். அவர்களின் முகவரிகள் தவறானவை அல்லது முகவரிகள் இல்லை அல்லது அந்த முகவரிகளில் அவர்கள் வசிக்கவில்லை.

ஒவ்வொரு வீட்டு முகவரியிலும் 80 மற்றும் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தனி வீடுகளில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

புதிய வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6, பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 33,692 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

4: ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள்

ராகுல் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:

ஹரியானாவில், மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் இருந்த எட்டு தொகுதிகளில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையிலான வித்தியாசம் வெறும் 22,779 வாக்குகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டன.

90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொன்ன கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் கட்சி சுமார் 60 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்தன.

5: தேர்தல் ஆணையம் பற்றி ராகுல் காந்தி என்ன சொன்னார்?

“2024 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோதி ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால் 25 இடங்களைத் திருட வேண்டியிருந்தது. அந்தத் தேர்தலில், பாஜக 33 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 25 இடங்களை வென்றது” என்று ராகுல் காந்தி கூறினார்.

“இந்திய ஜனநாயகத்தை அழிக்காமல் பாதுகாக்க பாடுபடுங்கள் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் சொல்கிறோம். இந்தத் தகவல்கள் அனைத்தும் எங்கள் கூற்றுக்கு முக்கிய சான்றாகும். கர்நாடகாவின் தகவல்கள் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு வாக்காளர் பட்டியலும் இப்போது ஒரு சான்றாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

“இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இந்தியக் கொடிக்கும் எதிரான குற்றம் என்பதைவிட குறைவானதில்லை. இது, ஒரு சட்டமன்றத்தில் நடந்த குற்றத்திற்கான சான்று. இந்த வடிவத்தை அவதானித்தால் இதனை நாங்கள் முழுமையாக உறுதியாக நம்புகிறோம். இதை நாங்கள் சரியாக கவனித்து ஆய்வு செய்திருக்கிறோம்.”

“தேர்தல் ஆணையம் எங்களுக்குத் தரவுகளைத் தரவில்லை, சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக அவர்களே கூறினார்கள்… அதனால்தான் அவர்கள் அந்தக் காட்சிகளை அழிக்க விரும்பினார்கள்” என்று ராகுல் காந்தி கூறினார்.

 ராகுலின் குற்றச்சாட்டுகள் குறித்து நிபுணரின் கருத்து என்ன?

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்று கூறும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அதிதி ஃபட்ணீஸ், “இது தேர்தல் ஆணையத்தை சுற்றிவளைக்கும் ஒரு செயல். தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு கையாள்வது என்பதுதான் தேர்தல் ஆணையத்திற்கு சோதனையாக இருக்கும்” என்று கூறினார்.

“தேர்தல் ஆணையம் போன்ற பாரபட்சமற்ற நிறுவனம் ஒன்றிற்கு எதிராக முதன்முறையாக இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் நேர்மையற்ற செயலைச் செய்ததால் பல வாக்காளர்களின் கைகளில் இருந்த வாக்கு என்ற ஆயுதம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் அவரிடம் பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, எனவே இது தர்க்கரீதியானது என்று நினைக்கிறேன். ராகுல் காந்தியிடம் வலுவான ஆதாரம் ஏதேனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார்.”

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளின் நேரம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ஃபட்ணீஸ், பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்த பிரசாரம் அதாவது SIR தொடர்பாக சர்ச்சைகள் தொடரும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்குகின்றன.

‘பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அரசியல் பிரச்னைகளில் ஒன்றாக மாறும்’ என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

பாஜக என்ன சொன்னது?

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார்.

“ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருவதோடு, பொய்யான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இதை நான் எதிர்க்கிறேன். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாக அவர் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார். அவரது கட்சி தனது இருப்பை இழந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியும். அடுத்த தேர்தலில் பொதுமக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்” என்று மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி கூறினார்.

“மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தோற்றீர்கள். மக்களவைத் தேர்தலில் மேலும் அதிக இடங்களை இழந்தீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. கர்நாடகாவில், சட்டமன்றத்தில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வந்தாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் பாதகமாக இருந்தன. மகாராஷ்டிராவில் சட்டமன்றத்திலும், மக்களவையிலும் நீங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது, நாட்டிற்கும் உலகிற்கும் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?”

“தர்க்கமும், புத்திசாலித்தனமும் முக்கியம். இந்தியாவில் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்று உலகிற்குச் சொல்ல முயற்சிக்கிறீர்களா? ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய அமைப்புகளை அவதூறு சொகிறார். தேர்தல்களில் மோசடி நடத்தப்பட்டது உண்மையாக இருந்தால், ஜார்க்கண்டில் உங்கள் வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெற்றனர்? ஜம்மு காஷ்மீரில் நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?”

ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புப் பற்றி பேசிய பாஜக எம்.பி சம்பித் பத்ரா, “இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் குறித்தும் பேசினார். ராகுல் காந்தி அரசியலமைப்பு நிறுவனம் ஒன்றை தாக்கிப் பேசுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. தான் வெற்றி பெற்ற மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை அவர் ஏன் நம் முன் முன்வைக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

போலி வாக்காளர்கள் குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.