தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் ஃபஹத் ஃபாசிலுக்கு ADHD பாதிப்பு உறுதியாகியுள்ளது.. அதென்ன ADHD பாதிப்பு.. இது என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒட்டுமொத்தமாக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருபவர் ஃபஹத் ஃபாசில். மலையாளம், தமிழ், தெலுங்கு என எந்த மொழியில் இவர் எந்த படம் நடித்தாலும் அதற்கு இருக்கும் வரவேற்பே தனி.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ஆவேசம்’ திரைப்படத்திற்கும் மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அது ஓடிடி தளத்தில் வெளியான பிறகு அதற்கு நாடு முழுக்க இருந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
பாதிப்பு உறுதி
இதற்கிடையே கேரளாவின் கொத்தமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஃபஹத் ஃபாசில், தனக்குச் சமீபத்தில் ADHD அதாவது Attention-deficit/hyperactivity disorder (கவன பற்றாக்குறை/ ஹைப்பர் ஆக்டிவிட்டி கோளாறு) உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அவரது பேச்சை வைத்துப் பார்த்தும் போது மிகச் சமீபத்தில் தான் அவருக்கு இந்த கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது போலத் தெரிகிறது.
இந்த பாதிப்பைக் கண்டறிந்த போது மருத்துவருக்கும் அவருக்கும் என்ன மாதிரியான உரையாடல் நடந்தது என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார். அங்கு பேசிய அவர், “நான் இங்கே மருத்துவரிடம் ADHD பாதிப்பை ஈஸியாக குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன். அதற்கு மருத்துவர் சிறு வயதில் கண்டறிந்தால் அதை ஈஸியாக குணப்படுத்தலாம் என்றார்.. 41 வயதில் கண்டறியப்பட்டால் அதைக் குணப்படுத்த முடியுமா எனக் கேட்டேன். ஏனென்றால் எனக்கும் ADHD பாதிப்பு இருக்கிறது” என்றார்.
ஃபஹத் பாசிலுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தான் 41 வயது நிறைவடைந்தது. எனவே, அவரது பேச்சை வைத்துப் பார்க்கும் போது சமீபத்தில் தான் அவருக்கு ADHD கண்டறியப்பட்டது போலத் தெரிகிறது. இந்தத் தகவலைக் கேட்டு அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். சரி இந்த ADHD என்றால் என்ன.. இதன் அறிகுறிகள் என்ன.. இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ADHD என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.. இது மூளையின் கவனம், நடத்தை மற்றும் கட்டுப்படுத்தும் திறனைப் பாதிக்கிறது. இது குழந்தைகளிடையே பொதுவானது.. ஆனால் வளர்ந்த பெரிதாகும் போதும் இது நக்கு இருந்தால் அது பெரிய சிக்கலையே தருவதாக இருக்கும்.. இந்த ADHD பொதுவாக இரண்டு வகையாக இருக்கும்.
முதலில் கவனக்குறைவு.. ஒரு வேலை அல்லது விளையாட்டில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது.. வழக்கமாகச் செய்யும் பணிகளில் கூட கவனக்குறைவால் அடிக்கடி தவறுகளைச் செய்வோம். ஒழுங்கமைப்பதில் சிரமம் இருக்கும்.. நமக்குத் தேவையான பொருட்களை அடிக்கடி தொலைத்துவிடுவோம். தினசரி நார்மலாக செய்ய வேண்டியவற்றைக் கூட மறந்துவிடுவோம். இவை எல்லாம் முதல் வகை.
அடுத்து ஹைப்பர் ஆக்டிவிட்டி.. கை மற்றும் கால்களைத் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருப்பது.. ஒரு இடத்தில் கொஞ்ச நேரத்திற்கு மேல் அமர முடியாமல் போவது.. அதிகமாகப் பேசுவது.. எதிரில் இருப்பவர் பேசுவதைக் கேட்க முடியாமல் இருப்பது.. காத்திருக்க முடியாமல் இருப்பது ஆகியவை அறிகுறிகளாகும்.
அறிகுறிகள் என்ன
இந்த அறிகுறிகள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இருந்தால் மட்டுமே ADHD பாதிப்பு உறுதி செய்யப்படும்.. ஒருவருக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது.. இருப்பினும் ஜெனிடிக்ஸ், மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
மேலும், குடும்பத்தில் ஏற்கனவே யாருக்காவது ADHD இருந்தால் இதன் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அதேபோல சிறுவயதில் இருந்தே புகையிலை அல்லது மதுபானம் குடிப்பதும் இதற்குக் காரணமாகும். இதைச் சிறு வயதிலேயே கண்டறிந்து நீண்ட காலம் சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.