அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பெண் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ரூ.50 ஆயிரத்தை தூக்கி கொடுத்து நெகிழ வைத்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவை தேர்தல் பணிகளை மாவட்ட வாரியாக மேற்கொண்டு வருகிறது. அதிமுகவை எடுத்து கொண்டால் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளனர். ‛மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி பஸ்சில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது உத்திராணி பச்சைமுத்து என்பவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மருத்துவ உதவி கோரினார். தனக்கும், தனது கணவருக்கும் இருக்கும் உடல்நல பிரச்சனைகளை கூறி மருத்துவ உதவி கேட்டார். அதனை கனிவுடன் கேட்ட எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் உதவி செய்வதாக கூறியதோடு, தனது கோரிக்கையை மனுவாக வழங்க கூறினார்.

இதையடுத்து உத்திராணி பச்சை முத்து தனது கோரிக்கையை மனுவாக வழங்கிய நிலையில் அவரை நேரில் அழைத்து எடப்பாடி பழனிச்சாமி ரூ.50 ஆயிரம் வழங்கி உதவி செய்தார். இதுதொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எழுச்சிப்பயணம் மேற்கொண்டிருந்த போது, உத்திராணி பச்சைமுத்து என்ற பெண்மணி, தனக்கு மருத்துவ உதவி தேவை எனக் கோரியிருந்தார். அப்போது, தனது கோரிக்கையினை மனுவாக மாவட்டக் கழகச் செயலாளரிடம் அளிக்குமாறும், அஇஅதிமுக நிச்சயம் உதவி செய்யும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்கள்.

இந்நிலையில், தற்போது அஇஅதிமுக சார்பில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, உத்திராணி பச்சைமுத்துவுக்கு மருத்துவ செலவுகளுக்கு தேவையான நிதி உதவியினை வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் உடன் இருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.