இரண்டாம் பாண்டியர்கள் பன்றி மலையில் மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளை வேட்டையாடியுள்ளனர். அப்போது தாய் பன்றி இறந்துவிடவே, தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பாச்சலூரில் தஞ்சமடைந்துள்ளது. தாயை இழந்து பாலுக்காக தவித்துக்கொண்டிருந்த குட்டிகளுக்கு சிவபெருமானே தாய் பன்றியாக அவதாரமெடுத்து அந்த குட்டிகளுக்கு பாலூட்டி பசியாற்றியுள்ளார்” என்ற மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைத் தாங்கியுள்ளது அருள்மிகு தரிசனலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள பாச்சலூருக்கு பயணப்பட்டோம்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பாச்சலூர் சென்றோம். போகும் வழியில் வடகாடுக்கு அருகில் அமைந்துள்ள 1975 ஆம் கட்டப்பட்ட பரப்பலாறு அணைக்கு சிறப்பு அனுமதி பெற்று அங்கு போனோம். யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்கின்றனர். ஒட்டன்சத்திரம்-பாச்சலூர் சாலையிலிருந்து பரப்பலாறு அணைக்கு சுமார் 3 கிமீ தூரம் இருக்கும். வழிநெடுகிலும் யானை ரத்தி காணப்படுகிறது. யானைகள் தொந்தரவு மிகவும் அதிகமாக உள்ளது. அணைக்கு அப்பால் இருக்கும் எங்கள் ஊரான பால் கடைக்கு யானைகள் அடிக்கடி வந்துவிடுவதால் நிம்மதியின்றி இருக்கின்றோம் என்றார் அரசு ஊழியர் ஒருவர்.பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் சங்கமிக்கும் இடம் தான் இந்த பரப்பலாறு அணை. தமுக்குப்பாறை, தட்டப்பாறை எனும் பிரம்மாண்டமான பாறைகளுக்கு நடுவே பள்ளத்தை நோக்கி பாய்கிறது பரப்பலாறு. அந்த இரண்டு பாறைகளையும் இணைத்து கடந்த 1975-ம் ஆண்டு 90 அடி உயரத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணை ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு திண்டுக்கல், கரூர் மாவட்டத்தில் 2,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.
அணை நிரம்பினால் நங்காஞ்சியாறு வழியாக சத்திரப்பட்டி, முத்துபூபாலசமுத்திரம், பெருமாள்குளம், சடையன்குளம், செங்குளம் ஆகிய குளங்களுக்கு நீர் சென்ற பின் இறுதியாக இடையகோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு செல்கிறது. ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகளின் தாகம் தணிப்பதாகவும் அணை விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வன விலங்குகள் உணவு, தண்ணீர் அருந்த வருவதை பார்க்க முடியும். அணைக்கு செல்லும் வழி முழுவதும் இயற்கை வளம் நிறைந்து கிடக்கிறது. தொலைபேசி கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அணையின் நிலையை அதிகாரிகளுக்கு தெரிவிக்க பயன்படுத்திய ‘வாக்கி டாக்கி’ சாதனங்களுக்கான டவர் இன்னும் அணைப்பகுதியில் உள்ளது.பரப்பலாறு அணை மற்றும் விருப்பாச்சி தலையூத்து அருவியை சுற்றுலாத் தலங்களாக்க ரூ.8.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது அரசு. பரப்பலாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது. பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் மேல் தலையூத்து அருவி பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் என்கிறார்கள்.இந்தியாவிலேயே முதல் முறையாக அணையின் பழைய கொள்ளளவை மீட்டெடுக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, பாச்சலூர் வந்தடைந்ேதாம். இது ஒரு மலை கிராமம் ஆகும். வெயில் இருந்தாலும் அவ்வளவாக வெப்பச் சலனம் தெரிவதில்லை. இரு கைகளை இறுக்கிக் கட்டிக்கொள்ளும் அளவிற்கு குளிரும் இல்லை. இதே பாச்சலூருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளேன். இப்போதும் எவ்வித பெரிய முன்னேற்றங்கள் ஏதும் இல்லை. இங்கு விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. காபி, மிளகு, கொடி அவரை, காலிபிளவர், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பழமையான அருள்மிகு தரிசனலிங்கேஸ்வரர் சிவன் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் பாண்டியர்கள் காலத்து கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இந்த பழமையான சுயம்புலிங்க கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பலர் வந்து செல்கின்றனர். மண்ணாடியார், பிள்ளைமார், செட்டியார், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்கள் உள்ளிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
பாச்சலூர் நகரப்பகுதியின் பின்புறம் பழங்குடியின மக்கள் பாறையின் மீது வீடுகள் கட்டியுள்ளனர். வீட்டிற்கு அருகிலேயே கழிவறை அமைத்தால் கழிவுநீர் தொட்டி அமைக்க இயலாது என்று ஊராட்சி நிர்வாகம் கருதியதால் குடியிருப்பு பகுதிகளுக்கு சற்று அப்பால் வரிசையாக கழிவறைகள் கட்டப்பட்டு அதன் கதவில் பயனாளியின் பெயர் எழுதப்பட்டு, பூட்டு இடப்பட்டு அதன் சாவியை இரண்டு அல்லது மூன்று பயனாளிகள் வைத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாம். பார்ப்பதற்கே விநோதமாக இருந்தது. இருப்பினும் அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்துவதைப்போல தெரியவில்லை.பயோ செப்டிக் டேங்க் பொருத்தி அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே கழிவறை அமைத்துவிட்டாலே போதும் பொது இடங்களை அசுத்தம் செய்ய மாட்டார்கள் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைத்தேன். பாச்சலூர், பெரியூர், கே.சி.பட்டி உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஒட்டன்சத்திரம் வட்டம் தான் அருகில் உள்ளது. ஆனால், தொலைவில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் இந்த ஊர்கள் உள்ளதால் அரசு அலுவல் பணி மற்றும் போக்குவரத்தில் மிகுந்த சிரமம் உள்ளது என்கின்றனர்.
மேலும், இந்த பகுதிகளுக்கான சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சத்திரப்பட்டியில் இருந்து வந்தது. இப்பகுதிகளை கொடைக்கானல் வட்டத்தில் சேர்த்ததால் பத்திரப்பதிவு வேலைகளுக்கு கொடைக்கானல் செல்ல வேண்டியுள்ளது. அது மட்டுமா அரசு சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் கொடைக்கானல் தான் செல்லவேண்டும். அதோடு, கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் குறிப்பிட்ட காலம் வரைதான் பத்திர நகல்கள், வில்லங்ச்சான்றுகள் கிடைக்கும். அதற்கும் முந்தைய காலம் என்றால் சத்திரப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் தான் வரவேண்டும் என்கின்றனர் பாவமாக. இதுதொடர்பாக ஓட்டுக் கேட்டு வருவோர்களிடம் கோரிக்கை வைக்க வலியுறுத்தினேன்.இங்குள்ள நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது என்றனர். மேல்நிலைப்பள்ளிக்கு கே.சி.பட்டிதான் செல்ல வேண்டுமாம். பெரும்பாலும் யாரும் இங்கு படிப்பதில்லை. கீழே ஒட்டன்சத்திரத்தில் விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகள் உள்ளதால் அங்கு சென்று படித்துக் கொள்கின்றார்களாம். உணவு விடுதிகள், ஓய்வு விடுதிகள் என எதுவும் அங்க கிடையாது. நல்ல ஓட்டல் சொல்லுங்க என்று கேட்டால் வடகாடுக்கு அருகில் குணா கடை உள்ளது. அங்குதான் ஏதாவது இருக்கும் எது இருக்கோ அதை சாப்பிட்டு போங்க என்பார்கள். பாச்சலூர் கடைவீதி பகுதிகளில், இரண்டு மூன்று உணவகங்கள் இருக்கும். காய்கறிகடைகள் அதிகமாக தென்பட்டது.
மலைப் பகுதிகள் மேம்பட அங்கு சுற்றுலாத் தளம் இருக்க வேண்டும். அல்லது பணப்பயிர்கள் அதிகளவில் இருத்தல் வேண்டும். இவைகள் அங்கு இல்லை என்பதே வளர்ச்சியின்மையின் காரணம். அம் மக்களின் வாழ்வாதாரம் சிறக்காததற்கு காரணம் அங்கு கல்வியறிவு, போதிய தொழில்கள் இல்லை. இம் மக்கள் கல்வியில் சிறந்து விட்டால் அவர்களின் வாழ்வு சிறந்தோங்கும்,,