திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17)  நடைபெற்றது. பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (36) என்பவர் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது, தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத ஆத்திரத்தில் கலெக்டரின் கார் கண்ணாடியை உடைத்ததால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கணேசன்

இது  குறித்து கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீஸாரிடம் விசாரித்தோம். பழநியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து   வருகிறார் கணேசன். இவர் தன் சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக 3 சென்ட் இடம் வாங்கியுள்ளார். அதில் வீடு கட்டுவதற்காக வீட்டு லோன் வழங்கும் தனியார் நிறுவனத்திடம் லோன் கேட்டுள்ளார். இதற்காக அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்வதற்காகப் பழநியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். அவரது நில ஆவணங்களை ஆய்வு செய்த சார் பதிவாளர் சம்பந்தப்பட்ட நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது எனக் கூறி கடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என மறுத்துள்ளார்.

நிலத்தைக் கிரயத்துக்கு வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளார். அப்போதே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடம் அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்டது எனக் கூறவில்லை. மாறாக எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதனால்தான் கணேசனுக்கு லோன் கிடைக்கவில்லை. இதைச் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று மனு அளித்திருக்கிறார். ஆனால் அறநிலையத்துறையை அணுகக் கோரியிருக்கிறார்கள். அங்கும் அவருக்குச் சரியாகப் பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான் கலெக்டரை சந்தித்து மனு அளித்திருக்கிறார். மனு கொடுத்து விட்டுப் புலம்பிக் கொண்டே வெளியே வந்தவர். பழநிக்குச் செல்லாமல் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சுற்றி வந்திருக்கிறார். மாலை 6 மணி அளவில் மீண்டும் கலெக்டர் அலுவலக வாசல் வந்தவர், ஒரு துணியில் கட்டப்பட்டிருந்த கற்களைக் கொண்டு கலெக்டரின் கார் கண்ணாடியில் அடித்துள்ளார். அங்கிருந்த போலீஸார் உடனடியாக அவரைத் தடுத்துக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

அன்றே பதிவுத்துறை முறையாக சரிபார்த்து பத்திரப்பதிவு மேற்கொண்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது..