தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், புன்னை வனம் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைந்த சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய திமுக பெண் கவுன்சிலர் ராமர் மற்றும் அவருடைய கணவர் மூக்கையா ஆகியோர் அங்கு பணியாற்றி வரும் அரசு மருத்துவர் முத்துக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ, சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மூக்கையா என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மஸ்தூர் (மருந்து ஊற்றும்) பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிக்கு செல்லாமலேயே பணம் வாங்கிவருதாக கூறப்படுகிறது. அதோடு, தனக்கு சுழற்சி முறையில் வழங்கி வந்த பணியினை நிரந்தரமாக வழங்க வேண்டும். இல்லையெனில் இந்த அரசு ஆரம்ப சுகதார நிலையம் இருக்கும் இடம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என் அப்பா கொடுத்தது அதனால் நீங்கள் எல்லாம் வெளியே செல்ல வேண்டும் என்று திமுக பெண் கவுன்சிலரும் அவருடைய கணவரும் சேர்ந்து மருத்துவர், செவிலியர்களை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர் முத்துக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு புளியங்குடி டிஎஸ்பி கட்டுப்பாட்டில் உள்ள சொக்கம்பட்டி காவல்துறையினர் பெயரளவில் மட்டும் திமுக பெண் கவுன்சிலர் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் எந்த நேரமும் அழைத்தால் விசாரணைக்கு வரவேண்டும் என்று கையெழுத்து வாங்கி விட்டு வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள்.
இது தொடர்பாக புன்னை வனம் ஊராட்சி மன்ற தலைவி பூமணியிடம் நாம் பேசினோம். பூமணி கூறுகையில், முன்பு இந்த மருத்துவனைக்கு சுடுகாடு எவ்வளவோ பரவாயில்லை என்று இருந்தது. பெரியளவில் பராமரிப்பு இருக்காது. போதிய மருந்து மாத்திரைகள் இருக்காது. இதனாலேயே சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த வயதானவர்கள் இந்த மருந்தை மட்டும் வாங்க இங்கு ஏன் வர வேண்டும் என்று வராமலே இருப்பார்கள். குலுக்கோஸ், அவசர சிகிச்சை என பாம்பு கடித்தால் கூட முதலுதவிக்கான ஊசிகூட இங்கு இருக்காது.பாதிக்கப்பட்டவர்கள் வேறு மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே இறக்கும் சூழ்நிலை கூட ஏற்பட்டு விடும்.
ஆனால், தற்போது அரசு மருத்துவர் முத்துக்குமார் பொறுப்பேற்றவுடன், தனது மேலதிகாரிகளுடன் பேசி முதலுதவிக்கான ஊசிகள், மருந்து மாத்திரைகளை தேவையான அளவு கேட்டு பெற்றிருக்கிறார். இதனால் முன்பு வராமல் இருந்த நோயாளிகள் தற்போது வந்து சிகிச்சை பெறுகின்றனர். முன்பு தினமும் 30 நேயாளிகள் வந்த நிலை மாறி தற்போது 250க்கும் மேல் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். முன்பு குலுக்கோஸ் போடவே மாட்டார்கள் ஆனால் தற்போது தினமும் தேவையானவர்களுக்கு குலுக்கோஸ் செலுத்தப்படுகிறது. குழந்தைகள், கர்ப்பிணிகளை காக்க வைக்காமால் உடனடியாக மருத்துவம் பார்த்து திரும்புகின்றனர்.
மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டிய பின்னர் மருத்துவமனைக்காக சேர், டேபிள், டிவி, ஃபிரிட்ஜ், சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை மருத்துவர் முத்துக்குமார் தன்னார்வலர்களிடம் உதவி கோரி பெற்றார். இந்நிலையில், திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவன் மூக்கையா இந்த மருத்துவ மனையில் மஸ்தூர் பணி செய்து வருகிறார். நியாயமாக இந்த மஸ்தூர் பணி விதவைகள், ஏழைப்பெண்கள் தான் மேற்கொண்டு வந்தார்கள். ஆனால் மூக்கையா தான் பணி செய்யாமல் மஸ்தூர் பணி செய்யும் மற்ற பெண்களை வேலை வாங்குவார்.
இந்த மருத்துவமனைக்கு ஏழு கிராமங்கள் உட்பட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கு 2 மஸ்தூர் பணியாளர்களை அமர்த்தி சுழற்சி முறையில் பணியமர்த்தினார் மருத்துவர் முத்துக்குமார். இதில் ஒரு பணியாளருக்கு தினமும் 519 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. சுழற்சி அடிப்படையில் தனக்கு தினசரிவேலை கிடைக்காது என்பதால் மூக்கையாமருத்துவருக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தார்.
அதோடு, கடந்த மாதம் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் சரவணக்குமாரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மஸ்தூர் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பு எனக்கு வேண்டாம் என்று சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் வசமே விட்டுவிட்டார் மருத்துவர் முத்துக்குமார். பின்னர், ஊராட்சி ஒன்றியம் நியமித்த மஸ்தூர் பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்த பின்னர்தான் மூக்கையா பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். மருத்துவர் முத்துக்குமார் தங்களுக்கு இணங்கவில்லை என்பதால் மூக்கையாவிற்கு சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் மற்றும் பிடிஓ ஆகியோர் ஒத்துழைப்பு தருகிறார்கள்.
மேலும் இதில் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்ட சொக்கம்பட்டி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக பெண் கவுன்சிலரின் கணவரை தூண்டி விட்ட சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சங்கரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேலாம்மாள் ஆகியோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால், கிராம மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என ஊராட்சி மன்ற தலைவர் பூமணி கூறினார்.
அரசு மருத்துவர் முத்துக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பெண் கவுன்சிலர் ராமர் மீது மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதோடு, அவரின் கணவர் மூக்கையா மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை பாயுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.