திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும், எண் 2588 கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் அதிகளவு முறைகேடுகள் நடப்பதாக இங்கு கடன் பெற்றவர்கள் புகார் கூறுகின்றனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் கடத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்கடன், பொருளாதாரக்கடன், நகைக்கடன், கால்நடைகளின் பேரில் கடன்கள் பெற்று வருகின்றனர். இங்கு செயலாளராக மாரியப்பன் (பொறுப்பு) என்பவர் பணியாற்றி வருகிறார்.

கடத்தூர், குருவன்வலசு, ராஜாம்பட்டி, பழனிக்கவுண்டன்புதூர், கொக்கரக்கல்வலசு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளான அம்சவேணி, மாரிமுத்து, ஆராயம்மாள், சேமலையப்ப கவுண்டர், லிங்கசாமி, கருப்பாயி, மீனாட்சி, பொன்ராஜ், தங்கவேல், ரங்கநாதன், சரோஜினி உள்ளிட்ட இன்னும் சில விவசாயிகள் தாங்கள் பயிர்கடன் பெற்று தங்களின் தவணை காலம் வரும்போது பெற்ற கடன் தொகையை, தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தியுள்ளனர். கட்டிய தொகைக்கு ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும் தற்போதுவரை இவர்களுக்கு மீண்டும் பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. அதோடு, விவசாயிகள் செலுத்திய தொகையும் தங்களின் வங்கிக்கணக்கிலும், பதிவு புத்தகத்திலும் வரவு வைக்கப்படவில்லை என்பதால் தங்கள் செலுத்திய பணம் எங்கே போனது என பீதியடைந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, பயிர்கடன் பெற தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்திற்கு நடையாய் நடந்தாலும் இன்று நாளை என அலைய வைக்கின்றனர் சரியாக பதில் சொல்வதில்லை. இதுகுறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சிறப்பு அலுவலர் எஸ்ஒ ஸ்ரீதரிடம் புகார் கூறினோம். இருப்பினும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக பணியாற்றும் மாரியப்பன் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இங்கு கடன் பெறும் விவசாயிகளிடம் கடன் தொகைகளுக்கு ஏற்றவாறு கையூட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.

இதுகுறித்த விசாரிக்க சிறப்பு அலுவலர் எஸ்ஒ ஸ்ரீதரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. எஸ்ஒ ஸ்ரீதர் இதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கும் பட்சத்தில் அதனையும் வெளியிட தயாராக இருக்கின்றோம்.

மேற்படி கையாடல் தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில்…