கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நிலப்பரப்பின் மூன்றில் ஒரு பங்கு, கனிமங்களாலும் கறுப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட் மலைகளாலும் சூழப்பட்டது ஆகையால் தான் ‘புதையல்களின் பூமி’ என அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்குள், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் அ.செல்லகுமார் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி-யாக பொறுப்பேற்றார்.
வன்னியர் சமூகத்தினர் கணிசமாகவும், வெள்ளாளக் கவுண்டர், ஆதிதிராவிடர் அதற்கடுத்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள். ஒக்கலிக கவுடா, ரெட்டி, தெலுங்குச் செட்டியார், நாயுடு போன்ற சமூகத்தினரும் இஸ்லாமியர், கிறிஸ்துவர்களும் ஆங்காங்கே கூடி வாழ்கிறார்கள்.
திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியில் கே.கோபிநாத், அதிமுகவில் ஜெயப்பிரகாஷ், பாஜகவில் நரசிம்மன் ஆகியோர் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தேர்தல் களத்தில் வாக்காளர்களைச் சந்தித்து, குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும். இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஆளுநா்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு நீக்கப்படும் என்ற இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். தேர்தல் பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், தொகுதி பொறுப்பாளா் பாா் இளங்கோவன் உள்ளிட்டோா் தலைமையில் தொண்டர்கள் முன்னெடுத்துச் செல்வதால், பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், அதிமுக வேட்பாளராக ஜெயப்பிரகாஷ் மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வயலில் இறங்கி, வேலை செய்யும் பெண்களை சந்தித்தும், டீக்கடையில் வாக்காளர்களுக்கு டீ போட்டு கொடுத்தும், மாட்டு வண்டியை ஓட்டியவாறு வீதிகள் தோறும் சென்றும், இஸ்லாமிய பகுதிகளில் உருது மொழியில் பேசியும் வித்தியாசமாக வாக்குச்சேகரித்து செம்ம எண்டர்டெய்ன்மென்ட் செய்து வருகிறார்.
பாஜக வேட்பாளர் நரசிம்மன் பாஜகவில் மாநில செய்தி தொடர்பாளராக உள்ளார். அதோடு இவர் முன்னாள் எம்பி-யாகவும் இருந்துள்ளர். ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று தரும் பாமக, பாஜக மா.செ கார் பரிசாக வழங்கப்படும். எந்த வாக்குச்சாவடியில் அதிக வாக்குகள் கிடைக்கிறேதோ, அந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும். மேலும், 1 லட்சம், 70 ஆயிரம், 50 ஆயிரம், 10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்து கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் முன்னர் பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தவர்.சில அதிருப்திகள் காரணமாக பாஜகவிலிருந்து விலகி, நாம் தமிழர் கட்சியில் இணைந்து வேட்பாளராகியுள்ளார். “நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” படேதலாவ் திட்டம், அஞ்செட்டியில் அணை உள்ளிட்ட நீர் திட்டங்கள் விரைந்து அமைக்க பாடுபடுவேன். இளைஞர்கள் சிறு குறு தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீவிரமாக தேர்தல் பரப்புரை செய்துவருகிறார்.
இங்கு மும்முனைப்போட்டி நிலவினாலும், காங்-அதிமுக என்றே களம் உள்ளது. கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளின் ஆதிக்கமும், அண்டைய மாநில அரசியல் தாக்கமும் அதிகம் இருக்கும். இதனால், திராவிட கட்சிகள் பெரும்பாலும், இத்தொகுதியை தங்கள் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிகளுக்கு ஒதுக்குவது வாடிக்கை.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 பேரவைத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் ஓசூர், பர்கூரில் திமுகவும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மட்டுமே வெற்றி பெற்றன. இம்முறை திமுக வெல்வதன் மூலம் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பதால் திமுகவின் தேர்தல் பணியில் அனல் பறக்கிறது. புதையல்களின் பூமியில் மீண்டும் காங்கிரஸ்-க்கே அதிர்ஷ்டம் என்கின்றனர்.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.