2024 மக்களவை தேர்தல் தமிழகம் முழுக்க திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களிலும் அதிகப்படியான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது என சில தனியார் நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணியான புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு இந்த தொகுதி சாதகமாகவும் வெற்றிவாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிது.
வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது வேலூர் மக்களவைத் தொகுதி. வன்னியர், இஸ்லாமியர் கணிசமாகவும், முதலியார், பட்டியலினத்தவர் அதற்கடுத்த எண்ணிக்கையிலும் வாழ்ந்து வருகின்றனர். தெலுங்கு பேசுபவர்களும், முத்தரையர், யாதவர் போன்ற பிற சமூக மக்களும் ஆங்காங்கே பரவி வாழ்கிறார்கள்.
திமுகவில் சிட்டிங் எம்பியும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான டி.எம்.கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியான புதிய நீதிக் கட்சியின் நிறுவனர்-தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுகவில் மருத்துவர் பசுபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேலூர் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவினாலும் வெற்றி யுத்தம் கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கு இடையேதான் இருக்கிறது. எனினும், இவ்விரு வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக உள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், 2014-ல் பாஜகவிலும், 2019-ல் அதிமுக-பாஜக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டார். இம்முறை மீண்டும் பாஜக அணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த 11 மாதங்களாக தொகுதியில் ஏ.சி.சண்முகம் மேற்கொண்டுள்ள இலவச மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகள் இவருக்கு பலம் சேர்க்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக, பாஜக ஒரே அணியில் இருந்தன. அப்போது, பிரதமர் மோடி எதிர்ப்பு அலையே திமுகவை வெற்றிபெறச் செய்தது என்பதற்கு வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் பேரவைத் தொகுதிகளே காரணம்.
மற்ற மூன்று பேரவைத் தொகுதிகளைவிட இஸ்லாமியர் வாக்குகள் அதிகம் உள்ள இம்மூன்று பேரவைத் தொகுதிகளில்தான் திமுக அதிகப்படியான வாக்குகள் பெற்று 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அதேசமயம், வன்னியர்கள் அதிகம் உள்ள கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் ஏ.சி.சண்முகத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
ஆனால், இம்முறை பாஜக அணியிலிருந்து விலகி அதிமுக தனியாக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது மட்டுமன்றி, பாஜக அணியில் பாமக இணைந்திருப்பதும் வேலூர் தொகுதி அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
திமுக, அதிமுகவுக்கு எதிராக வாக்குகள் பாஜகவிற்கு கிடைப்பது கூடுதல் வாய்ப்பாக உள்ளது.அதேநேரம், வன்னியரான அதிமுக வேட்பாளர் பசுபதி திமுகவுக்கு எதிரான வன்னியர் வாக்குகளை சிதறடிப்பார். இதனால், பாஜகவுக்கு எதிராக திமுகவுக்கு செல்லக்கூடிய வாக்குகளில் கணிசமான மாற்றம் ஏற்பட்டாலே அது ஏ.சி.சண்முகத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.