தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு மிக அருகிலிருக்கும் தொகுதி காஞ்சிபுரம். வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு கோவில்கள் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணா பிறந்த ஊர். இங்கு உலகப் புகழ்பெற்ற பட்டு நெசவுடன், விவசாயத்தையும் நம்பியே ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது.
தனித்தொகுதியான காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்த 6 தொகுதிகளிலும் சோ்த்து 17.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலினத்தவர், வன்னியர், முதலியார், யாதவர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 6,84,004 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலைத் தோற்கடித்து, இந்தத் தொகுதியின் எம்.பி ஆனார் திமுகவின் ஜி.செல்வம்.
திமுகவில் ஜி.செல்வம் தற்போது மீண்டும் வேட்பாளராகியுள்ளார். அதிமுகவில் ராஜசேகர், பாஜக கூட்டணியான பாமகவில் ஜோதி, நாம் தமிழர் கட்சியில் சந்தோஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுகவில், இளைஞரணித் துணை அமைப்பாளராக கட்சிப் பணியைத் தொடங்கிய ஜி.செல்வம், படிப்படியாக உயர்ந்து, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியச் செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் பதவிகளைப் பெற்றார். வழக்கறிஞரான இவர், விவசாயத்திலும் ஈடுபாடு கொண்டு, அது தொடர்பான தொழில்களைச் செய்துவருகிறார்.
திமுக வேட்பாளரும், சிட்டிங் எம்பியுமான ஜி.செல்வம் `நெசவு மூலப்பொருள் களுக்கான ஜி.எஸ்.டி வரியை ரத்துசெய்ய தொடர் கோரிக்கை, காஞ்சிபுரத்தில் பட்டுப்பூங்காவைக் கொண்டுவந்தது என பல உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்துள்ளார். அதோடு, இன்னும் சில வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். தொகுதிக்குள் முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை, வாட்ஸ்அப் மெசேஜ் செய்தால் போதும், உடனடியாக கவனத்தில் கொண்டு அதைச் செயல்படுத்தும் அளவுக்குத் தொகுதி மக்களோடு நெருக்கமாகவே இருக்கிறார். போன் செய்தால் அவரே பேசுவார். தொகுதிக்குள்ளும் நல்ல அறிமுகம் உண்டு என்றனர்.
அதிமுக வேட்பாளர் ராஜசேகர், வெளியூர் வேட்பாளராக இருந்தாலும், காஞ்சிபுரத்தில் களம் இறங்கி இருப்பது, சாதகமாகவே பார்க்கின்றனர். உள்ளூர் வேட்பாளர்கள் சிலர் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தாலும், தலைமை எதிர்பார்க்கும் தொகையை செலவு செய்ய முடியாததால் போட்டியிலிருந்து விலகினர். பணமும் செலவு செய்யக்கூடிய மற்றும் அனுபவம் நிறைந்த வேட்பாளர் என்பதால், காஞ்சிபுரம் தொகுதியை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கியுள்ளது அதிமுக.
பாமக வேட்பாளர் ஜோதி, திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசனின் மனைவி. இந்த மக்களவை தொகுதியில் பாமகவிற்கு செல்வாக்கு உள்ளதால், கணிசமான வாக்குகள் கிடைக்கும். கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி, தேசிய கட்சிகள் கூட்டணியில் அதிமுக இல்லாததால், தங்களுக்கு திமுகவின் எதிர்ப்பு வாக்குகளும் கிடைக்கும் என பாமகவினர் நம்புகின்றனர்.
இது திமுகவிற்கு சாதகமான தொகுதியாக இருந்து வருகிறது. திமுக வலுவான கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பலதரப்பட்ட மக்களிடமும் திமுக வேட்பாளர் செல்வம் தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார்.திமுக அரசு மகளிர் திட்டங்கள் உள்பட பல திட்டங்களை அளித்துள்ளது. வாக்காளர்கள் பதிலுக்கு தங்கள் வாக்குகளை வழங்குவார் என்கின்றனர்.