இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேச மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. இது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஒரு எம்.பி.க்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம், 1,400 ஆண்டுகள் பழைமையான பாகூர் மூலநாதர் கோயில், 300 ஆண்டுகள் பழைமையான ஐரோப்பிய தேவாலயங்கள் எனப் பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது புதுச்சேரி மக்களவைத் தொகுதி.

புதுச்சேரி,காரைக்கால்,மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களையும், மண்ணாடிப்பட்டு, திருபுவனை (தனி), ஊசுடு (தனி), மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம் (தனி), நெட்டப்பாக்கம் (தனி), பாகூர், நெடுங்காடு (தனி), திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி – திருப்பட்டினம், மாஹே, ஏனாம் என 30 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது புதுச்சேரி மக்களவைத் தொகுதி.

இந்தத் தொகுதியில், வன்னியர்களும் பட்டியிலின மக்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். ரெட்டியார், முதலியார் உள்ளிட்ட பிற சமூகத்தினரும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்களும் கூடி வாழ்கின்றனர். 1963 முதல் 2019 வரை இந்தத் தொகுதியில் நடைபெற்ற 15 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 11 முறையும், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றிபெற்றிருக்கின்றன. 

பாஜகவில் ஆ.நமச்சிவாயம், திமுக கூட்டணியான காங்கிரஸில் வெ.வைத்திலிங்கம் அதிமுகவில் கோ.தமிழ்வேந்தன்,நாம் தமிழா் கட்சியில் ஆா்.மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் மகன். எட்டு முறை எம்.எல்.ஏ., இரண்டு முறை முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் பதவி என நீண்ட அரசியல் அனுபவத்தைப் பெற்றவர். 2019 மக்களவை தேர்தலில் 1,97,025 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். `முதல்வராக இருந்து எம்.பி-யாக மக்களவைக்கு சென்று வரலாற்றில் இடம் பிடித்தவர்.

குடிநீர்ப் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், கடலரிப்பு, மழை வெள்ளம் போன்ற முக்கிய பிரச்னைக் களைந்துள்ளார். ஏனாம் பிராந்தியத்தில், ஜிப்மர் மருத்துவமனையின் கிளையை கொண்டுவந்துள்ளதோடு, மாஹே பகுதிக்கும் கிளை துவங்க முயற்ச்சி செய்து வருகிறார். சாலை, தெருவிளக்கு, அரசு கட்டிடம் என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும், செயல்படுத்தியுள்ளார் என்கிறார்கள். தொகுதிக்குள் நல்ல பெயரும், நல்ல அறிமுகமும் உள்ளது.

பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தற்போது புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சராக உள்ளார். பாஜகவில் இணைவதற்கு முன் திமுக, மதிமுக, தமாகா, காங்கிரஸ் கட்சிகளில் இருந்துள்ளார்.மேலும்,வேளாண்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தவர். முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மகளை மணந்துள்ளதால் அவருக்கு மருமகன் முறை வருவார் நமச்சிவாயம். மாநில அரசியலில் தொடர விரும்பும் அவரை கட்டாயப்படுத்தி மக்களவை தேர்தலில் களம்காணச் செய்கிறது பாஜக என்ற குற்றச்சாட்டை அவரின் ஆதராவாளர்கள் முன்வைக்கின்றனர். பாஜக அணியின் தேர்தல் பணியில் இணக்கம் இல்லை. 

அதிமுகவில் அதிமுக வேட்பாளர் கோ.தமிழ்வேந்தன் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளராக இருந்து வருகிறார். இங்கு அதிமுகவுக்கென்று நல்ல வாக்குவங்கியுள்ளது. தேசிய கட்சிகளை ஆதரிக்காதவர்கள் தங்களை ஆதரிப்பார் என்று நம்புகிறார்கள். கொளரவமான வாக்குகள் கிடைக்கும் என்கிறார்கள். இரட்டை இலையில் பலத்தை காட்டுவார்கள் என்கிறார்கள்.

இங்கு இங்கு காங்கிரஸ் பாஜகவுக்கு இடையேதான் யுத்தமே. இத் தொகுதி அதிகமுறை காங்கிரஸ்க்கு சாதகமாகவே இருந்துள்ளது. இந்த மாநிலத்திற்கே ஒரு எம்பி மட்டுமே என்பதால் அதன் முக்கியத்துவம் கூடியுள்ளது. நமச்சிவாயம் வென்றாலும் தோற்றாலும் பதவியுடனே இருப்பார். வாக்காளர்கள் மத்தியில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

நீண்ட அனுபவம் வாய்ந்த பழுத்த அரசியல்வாதியான சிட்டிங் எம்பி வைத்தியலிங்கம்தான் இங்கு மீண்டும் வெற்றிபெறுவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.