குற்றாலம் அருவிகள், குண்டாறு, அடவிநயினார், கருப்பா நதி, வாசுதேவநல்லூர் தலையணை உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்களும், குற்றாலநாதர் கோயில், சித்திரசபை, காசி விஸ்வநாதர், சங்கரநாராயண சுவாமி, கரிவலம் பால்வண்ணநாதர், தோரணமலை முருகன், இலஞ்சி குமரன் கோயில் எனப் புகழ்பெற்ற ஆன்மிகச் சுற்றுலாத்தலங்களும், இயற்கை வளங்களும் மிகுந்தது தென்காசி மக்களவைத் தொகுதி.
தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கும். இவற்றில் தற்போது, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திமுக வசமும், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வசமும் உள்ளன.
இந்த தொகுதியில், பட்டியல் சமூகத்தினரை அடுத்து, மறவர், நாடார், யாதவர், வன்னியர், விஸ்வகர்மா, சேனைத்தலைவர், கிறிஸ்துவ நாடார் மற்றும் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடும் படியான சதவிகிதத்தில் இங்கு வாழ்கிறார்கள்.
கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் பொது தொகுதியாக இருந்த தென்காசி, அதன் பின்னர் இப்போது வரை தனி தொகுதியாக நீடிக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள ஒரே தனி மக்களவை தொகுதி தென்காசியே. 1957 முதல் காங்கிரஸ் தொடர்ச்சியாக 9 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், திமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்றது. திமுகவைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் 4,76,156 வாக்குகள் பெற்றார். இவர் அதிமுக வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை விட 1,20,286 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
ஆனால், இம்முறை தனுஷ் எம்.குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, சங்கரன்கோவிலைச் சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.தென்காசி தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இப்போது 7-வது முறையாக அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகதலைவர் ஜான்பாண்டியன், இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக தென்காசி தொகுதியில் களம் காண்கிறார்.நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட இசை மதிவாணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இங்கு திமுக, அதிமுக, பாஜக என மும்முனைப்போட்டி நிலவுகிறது. திமுக கடந்தமுறை இதே கூட்டணி பலத்துடன் போட்டியிட்டு இந்த தொகுதியில் 44.69% வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து 33.4% வாக்குகள் மட்டுமே பெற்றது. தற்போது பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கடந்தமுறை தனித்துப் போட்டியிட்டு 8.64% வாக்குகள் பெற்றது. தற்போது திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மையம் கடந்தமுறை தனித்துப் போட்டியிட்டு 2.25% வாக்குகள் பெற்றது.
ஆக, அதிமுக, பாஜக பிரிக்கும் வாக்குகள் திமுகவை பாதிக்காது. திமுகவின் வாக்கு சதவிகிதம் கடந்த முறையை விட குறைந்தாலும் கூட திமுகவிற்கு வெற்றியைத்தரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தற்போதைய களநிலவரப்படி, திமுக முதலிடம் பிடிக்கும். இரண்டாம், மூன்றாம் இடங்களுக்குதான் இங்கு இழுபறி நீடிக்கிறது.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.