பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர் என இரண்டு முதலமைச்சர்களைத் தந்த மாவட்டம் விருதுநகர். பெருவணிகர்களால் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் விருதுநகரும், குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியும் இத்தொகுதியில் அடங்கிய ஊர்களே.

விருதுநகர் மக்களவை தொகுதியில், திருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிககள் உள்ளது. இந்த பொதுத்தொகுதியில், முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக, நாடார், பட்டியலினத்தவர்கள், யாதவர், ரெட்டியார், ராஜூக்கள் மற்றும் சிறுபான்மையின மக்களும் கூடி வாழ்கிறார்கள்.

விருதுநகர் மக்களவை தொகுதி செலிபிரெட்டி தொகுதியாக மாறி உள்ளது. திமுக கூட்டணியான காங்கிரஸில் சிட்டிங் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக உள்ள மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியான தேமுதிகவில் கேப்டன் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரன், பாஜக சார்பில் பிரபல நடிகை ராதிகா உள்ளிட்டவர்கள் களம் காண்கின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் உடன்பிறந்த மூத்த சகோதரர் பஹீரத நாச்சியப்பனின் மகன் தான் சிட்டிங் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர். இவர், 1994-ல் இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அணியின் மாவட்டச் செயலாளராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கி, தேசியத் தலைமையில் பொதுச் செயலாளராக உயர்ந்தார். இந்திய இளைஞர் காங்கிரஸின் தேர்தல் ஆணையர், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஹரியானா, கர்நாடகா, கோவா, தெலங்கானா மாநில காங்கிரஸ் தேர்தல் கமிட்டி பார்வையாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர். நாடாளுமன்ற சட்டம் மற்றும் நீதிக்குழு உறுப்பினர், சிவில் விமானப் போக்குவரத்து ஆலோசனைக்குழு உறுப்பினர், துணை மக்களவைச் சட்டக்குழு உறுப்பினராகவும், இருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில், மதிமுக தலைவர் வைகோவை வென்றவர் என்பது இவரின் தனித்த அடையாளம்.

தேமுதிகவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேட்டியிடுகிறார். விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாலும் இங்க களமிறங்கியுள்ளார்.2014 தேர்தலில், சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளையும், 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்று 3,16,329 வாக்குகளை பெற்று 2-ம் இடத்தைப் பிடித்தது. எனவே, இங்கு தேமுதிகவுக்கு நிலையான வாக்குவங்கி உள்ளதால் வெற்றிவாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.

பாஜகவில் போட்டியிடும் பிரபல நடிகை ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் திடுதிப்பென இணைத்து விட்டதால் தனது சமூகத்தை சேர்ந்த நாடார்கள் அதிருப்தியில் உள்ளனர். இங்கு வசிக்கும் நாடர்கள் ஓட்டு ராதிகாவிற்கு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்.  பாஜக கூட்டணியிலுள்ள அமமுக இங்கு 2019 தேர்தலில் போட்டியிட்டு 10.01 சதவிகித வாக்குகள் வாங்கியுள்ளது. பாஜகாவிற்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கியுள்ளது. இப்போது இன்னும் கூடியிருப்பதாக கருதுகிறது. திரையுலக நட்சத்திரம் என்பதால் வாக்குகேட்க செல்லும் இடங்களில் கொஞ்ச மாஸ் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது வெற்றிக்கான மாஸ் இல்லை என்கிறார்கள்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, பாஜக என மும்முனைப்பேட்டி நிலவி வருகிறது. சிட்டிங் எம்பியான மாணிக்கம் தாகூருக்கு இந்த பகுதியில் நல்ல அறிமுகம் உண்டு. 

இத் தொகுதியில் திமுக, காங்கிரஸ் தவிர மதிமுகவுக்கும் நல்ல வாக்குவங்கி உள்ளது. 2019 தேர்தலில் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்ற வாக்கு சதவிகிதம் 43.81., கடந்த முறை மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டு 5.32 சதவிகித வாக்குகள் பெற்றது.  தற்போது மநீம கூட்டணியில் உள்ளதால் பலம் கூடியுள்ளது. மேலும், ஆளுங்கட்சியான திமுகவிற்கு மகளிர் திட்டங்களால் பெண்கள் மத்தியில் இமேஜ் கூடியுள்ளது. இந்தியா கூட்டணியின் பலம், சுறுசுறுப்பான தேர்தல் பணிகள் போன்றவைகளால் “மீண்டும் மாணிக்கம் தாகூர்” தான் வெற்றி பெறுவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.