எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு முதல்வர்களும் தேனி மக்களவைத் தொகுதியிலுள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ-வாக உள்ளார்.

பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தேனி மக்களவைத் தொகுதி. சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய இரண்டு பேரவைத் தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் உள்ளன. பிற நான்கு பேரவைத் தொகுதிகளும் தேனி மாவட்டத்தில் உள்ளன.

தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர் நடைபெற்ற 3 தேர்தல்களில் 2 முறை அதிமுகவும், ஒரு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. பெரியகுளம் தொகுதியாக இருந்த போது தற்போதைய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சேடப்பட்டி முத்தையா இருமுறை வென்றுள்ளார்.

திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் நாராயணசாமி, பாஜக கூட்டணி அமமுகவில் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியில் மருத்துவர் மதன் ஜெயபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளரும், தேனி வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் எப்படியும் வெற்றிபெற்றே தீர வணே்டும் என்ற வேட்கையுடன் தேர்தல் பணியாற்றி வருகிறார். தங்க தமிழ்ச்செல்வன் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர். திமுக, காங்கிரஸ், விசிக கூட்டணி தங்க தமிழ்ச்செல்வனுக்கு மிகவும் கைகொடுக்கும். காங்கிரஸ் வாக்காளர்கள் அங்கு அதிகளவில் உள்ளார்கள். இல்லையெனில், இவிகேஎஸ் இளங்கோவன் ஏன் கடந்த தேர்தலில் போட்டியிடப் போகிறார்?

இந்த தொகுதியின் பொறுப்பு அமைச்சரான மூர்த்தி திமுக வேட்பாளர் தோற்றால் அடுத்தநாளே நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று பேசுகிறார். அப்படியென்றால், தங்க தமிழ்ச்செல்வனின் வெற்றிக்காக எவ்வளவு பீல்டு ஒர்க் பண்ணுவார் என நீங்களே யோசித்துப்பார்த்துக் கொள்ளுங்கள் என்றனர்.

ஓபிஎஸ்-க்கு தேனி தொகுதியில் செல்வாக்கு அதிகம். தமிழக 2019 மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 39 தொகுதிகளில், தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றிபெற்றார். இது அப்போது ஒபிஎஸ்-ன் பலமாக பார்க்கப்பட்டது.  அவரும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் தற்போதைய தேர்தலில் டிடிவி தினகரனை ஆதரிப்பது பாஜக கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனும் அப்பகுதியின் முன்னாள் எம்பி என்பதால், அத்தொகுதி மக்களுக்கும் டிடிவி தினகரன் மிகப்பரிட்சயம். அமமுகவிற்கு சாதகமாக உள்ள தொகுதிதான் தேனி. உசிலம்பட்டியின் சிட்டிங் எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில்தான் இருக்கிறார். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்களுக்கு குக்கர் சின்னத்தை அறிமுகம் செய்யவேண்டும் அதுமட்டுமே சிரமம் என்கின்றனர்.

அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். 1982 முதல் அதிமுகவில் இருப்பதாகக் கூறினாலும், கடந்த ஆண்டுதான் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பைப் பெற்றார். தற்போது தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். கடந்த 2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின் போது ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். கடந்த 2014, 2019 தேனி எம்பி தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டிருந்தார். எனவே தற்போது சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

பிற கட்சிகள் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை மையமாக வைத்து வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளன. ஆனால் அதிமுக-வில் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சோழவந்தான் போன்ற பகுதிகளில் அதிமுக ஆதரவாளர்கள் தான் அதிகம். அதிமுகவுக்கான வாக்குகள் கிடைக்கும் என்கிறார். அதிமுகவில் இபிஎஸ் தலைமைப் பொறுப்பிற்கு வந்த பின்னர் தென் மாவட்ட சாதியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற கோபம் இப்பகுதி மக்களிடம் உள்ளது.

தேனி தொகுதியில் டிடிவி தினகரனா? தங்கதமிழ்செல்வனா? என இருமுனைப் போட்டியாகவே உள்ளது. அதிமுக இங்கு மூன்றாம் இடம்தான் என்கிறார்கள். டிடிவி-ஓபிஎஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. டிடிவி-யை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே ஓபிஎஸ் தான். தற்போது ஓபிஎஸ்-க்கு நெருக்கடி நிலை என்பதால் மீண்டும் டிடிவியுடன் கூட்டு சேர்ந்து கொண்டார். இவர்களை மக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறார்கள்.

2019 தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 வாக்குகளைப் பெற்றிருந்தார். அப்போது திமுக ஆளுங்கட்சியாகக் கூட இல்லை. இங்கு அதிமுக வாக்குகள் அதிமுக-டிடிவி என இரண்டாகப் பிரியும் எளிதாக வென்றுவிடலாம் என டிடிஎஸ் மனப்பால் குடிக்கிறார். ஒபிஎஸ், டிடிஎஸ் போன்றோர்களுக்கு அரசியல் வழிகாட்டியான டிடிவி களத்தில் தீயாக வேலை செய்து வருகின்றார். அதோடு அவரின் மகளும் சூறாவளிப்பிரச்சராம் செய்கிறார். தற்போதைய களநிலவரப்படி டிடிவி முன்னேறுகிறார். குருவை சிஷ்யன் மிஞ்சவே முடியாது. பாஜகவிற்கு பெரும் நம்பிக்கையையே இந்த தொகுதிதான் தான் என்கிறார்கள்.

தேனி மல்லுக்கட்டு..