சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் கடந்து வரலாற்றுச் சுவடுகளோடு காட்சி தருகிறது மதுரை.

மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தியத் தொகுதி, மேலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மதுரை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை 1952 முதல் 2019-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில்களில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் (காங்கிரஸில் இருந்து ஜி.கே.மூப்பனார் பிரிந்த போது மட்டும்), திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான மக்களவை தொகுதிகளில் மதுரை மக்களவை தொகுதியும் ஒன்று. திமுகவின் கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்பியான சு.வெங்கடேசன், அதிமுகவில் டாக்டர். சரவணன், பாஜகவில் பேராசிரியர் சீனிவாசன், நாம் தமிழர் கட்சியில் சத்தியதேவி அகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுரை மக்களவையை பொறுத்தவரை, முக்குலத்தோர், சௌராஷ்டிரர், யாதவர், இஸ்லாமியர், கிறிஸ்துவர், முத்தரையர், நாயக்கர், நாடார், பட்டியலினத்தவர் ஆகியோர் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சமூகங்களுக்கு அடுத்த எண்ணிக்கையில் வெள்ளாளர், செட்டியார், ரெட்டியார், நாயுடு, உடையார் எனப் பல சமூகத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் பரவி வாழ்கிறார்கள்.

தொகுதியைப் பொறுத்தவரையில், விவசாயம்தான் பலருக்கும் வாழ்வாதாரம். ஒருகாலத்தில் பஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், ஆலைகள் நிறைந்திருந்தது, இன்று சிறு, குறு தொழில்கள் மட்டுமே அதிக அளவில் இருக்கின்றன. சிறு வணிகர்கள் மூலமாக நடத்தப்படும் தொழில்களை நம்பி, பல்லாயிரக் கணக்கானோர் வாழ்கிறார்கள்.

காவல் கோட்டம், வேள்பாரி உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களை எழுதிய சாகித்ய அகாடமி விருதுபெற்ற சிட்டிங் எம்பி சு.வெங்கடேசன் மதுரை இடையபட்டியில் மூன்றாவது கேந்திர வித்யாலயா பள்ளி, விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாகத் தரம் உயர்த்தியது அதோடு, அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க பூங்கா, ரயில் திட்டங்கள், மாணவர்களுக்கு கல்விக்கடன் போன்ற திட்டங்களை செய்துள்ளார். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பல முறைகேடுகளை வெளியில் கொண்டுவந்தவர்.

நாடு முழுவதும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது போன்றவை அவருக்கு ப்ளஸாக பார்க்கப்படுகிறது. “எம்பி-யை கண்டா வரச்சொல்லுங்க” என தமிழகம் முழுவதும் பெயர் வெளியிடாத அமைப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். மற்ற எம்பிக்கள் இதற்கு எப்படி பதிலடி தருவது என தயங்கியபோது, அந்த போஸ்டர் அருகிலேயே நின்று போட்டோ எடுத்து “ஐயம் வெயிட்டிங்” எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது வைரலாகி மற்ற மக்களவை உறுப்பினர்களின் மனக் காயத்திற்கும் களிம்பு போட்டர்.

“ஏய் எங்க அண்ணன் இல்லாத கட்சியே கிடையாதுயா” என்பதைபோல அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் முன்பு மு.க.அழகிரி ஆதரவாளர், பின்னர் மதிமுக, பாஜக, திமுக மறுபடியும் பாஜகவிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் உள்ளார். ஸ்ஸ்ஸப்பா..

முன்னாள் எம்எல்ஏ சரவணன் பணபலம் உள்ளவர் என்பதோடு, மதுரை மாவட்ட மக்களுக்கு அறிந்த முகம். பல்வேறு சமூகப் பணிகளையும், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும் செய்து வருவதால் அதிமுக தலைமை இவருக்கு ‘சீட்’ வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவும், இவரின் சமூக வாக்குகளும் முழுதாக கிடைக்கும் என நினைக்கிறார்.

பாஜகவில் வேட்பாளர் பேராசிரியர் சீனிவாசன், களத்தில் இறங்கி வேலை பார்க்கக்கூடியவர் அல்ல என பாஜகவினரே கூறுகின்றனர். அத்துடன், பாஜகவில் பெரிதாக செலவும் செய்யப்படுவதில்லை. கட்சிக்காரர்களை தவிர, சு.வெங்கடேசன் போன்றோ அதிமுக வேட்பாளர் சரவணன் போண்றோ மக்கள் மத்தியில் அறிமுகமானவர் கிடையாது. பெரிதாக மெனக்கெடாமல் இருக்கும் செயல்பாடுகள் அவருக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.

இங்கு போட்டி என்பது திமுவுக்கும் அதிமுகவிற்கும் தான். இயல்பாகவே, மதுரை, மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் பரவலாக காணப்படுகிறது. கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணி பலம் என்பதால் தேர்தல் பணிகள் படு சுறுசுறுப்பாக உள்ளது. சிட்டிங் எம்பி சு.வெங்கடேசன் எளியமையான அணுகுமுறை உடையவர், தொகுதிக்குள் நல்ல அறிமுகமான முகம் என்பதால் புதிய வேட்பாளர்கள் பக்கம் வாக்காளர்கள் கவனம் திரும்பவில்லை என்கின்றர்.

தற்போதைய கள நிலவரப்படி கடந்த 2019 மக்களவைத் எம்பி சு.வெங்கடேசன் 44.20 சதவீத வாக்குகள் பெற்றார். தற்போது திமுகவின் வலுவான கூட்டணி, ரூலிங் பார்ட்டி என்ற இமேஜால் அசால்ட்டாக ஜெயித்து விடுவார் என்கின்றனர். முந்துகிறார் சிட்டிங் எம்பி சு.வெங்கடேசன்.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.