தமிழ்நாட்டின் இந்த ஒரு மக்களவை தொகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. இந்த தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே பெரும்பாலும் கொடுத்து விடும். சில சமயங்களில் நேரடியாக திமுகவே போட்டியிட்டுள்ளது. ஆனால், அந்த தேர்தல்களில் அக்கட்சி தோல்வியடைந்ததுதான் வரலாறு. ஆம் அதுதான் சிவகங்கை மக்களவை தொகுதி.
சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகள் சிவகங்கை மாவட்டத்திலும், ஆலங்குடி, திருமயம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளது. இதுவரை நடந்த 14 தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் த.மா.கா சார்பில் 8 முறை போட்டியிட்டு 7 முறை ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அவர் மகன் கார்த்தி சிதம்பரம் 2 முறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
இத்தொகுதியை பொருத்தவரை முக்குலத்தோர் (கள்ளர்,மறவர்,அகமுடையார்), நகரத்தார், வல்லம்பர், முத்தரையர், யாதவர், உடையார், பிள்ளைமார், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இருப்பினும் தொகுதியின் வெற்றியைத் தீர்மானிப்பது முக்குலத்தோர் சமூகம் மட்டுமே.
திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியில் கார்த்திக் சிதம்பரமும், அதிமுக சார்பில் சேவியர்தாசும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேவநாதன் யாதவ்வும், நாம் தமிழர் கட்சியில் இளவரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் கார்த்திக் சிதம்பரம் தான் சிட்டிங் எம்பியாக இருந்து செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களை கூறியும், மத்தியில் பாசிச ஆட்சியை அடியோடு அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுந்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், பாஜகவும்-அதிமுகவும் கூட்டணி இல்லை என்று நாடகமாடுகிறது என தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர் அ.சேவியர்தாஸ் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பனங்குடியைச் சேர்ந்தவர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் சேர்ந்து பனங்குடி கிளைச் செயலாளராகவும், நடராஜபுரம் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் இருந்தார். தற்போது கல்லல் ஒன்றியச் செயலாளராக உள்ளார். கல்குவாரி, கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். ஆனால் சேவியர்தாஸூக்கு மாவட்டச் செயலாளர் ஆசி இருந்ததால், கட்சித் தலைமை அவரை தேர்வு செய்தது.
அதிமுகவின் கடந்த முறை ஆட்சியில் இருந்த போது செய்த திட்டங்களை எடுத்துக்கூறி, ஆளும் திமுக அரசை விமர்சித்தும் வாக்குச்சேகரித்து வருகிறார்.திமுக அரசு பொறுப்பேற்றதும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுவிட்டது, சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டணங்களையும் உயர்த்திவிட்டனர் என்று பரப்புரை செய்து தீவிரமாக வாக்குச்சேகரித்து வருகிறார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெற்றியை அறுவடை செய்ய தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனார்.
இந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக தேவநாதன் யாதவ் அறிவிக்கப்பட்டதற்கு, பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளன. அதில், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை எளிதாக வெற்றி பெற செய்ய திருநெல்வேலியில் இருந்து சிவகங்கை பாராளுமன்றத்துக்கு சீட்டு கொடுத்த பாஜக தேசிய மாநில தலைமைக்கு மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி என தெரிவித்து கிண்டல் செய்து வருகின்றனர்.
சிட்டிங் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது தொகுதிப்பக்கமே தலை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இருப்பினும் காலம்காலமாக காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ்தான் என்கிறார்கள் ஒருபுறம், மறுபுறம் அதிமுக வேட்பாளர் புதிய முகமான சேவியர்தாஸ்க்கு இம்முறை வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே என்கிறார்கள். சிவகங்கை இழுபறி..
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.