தமிழகத்தின் நெற்களஞ்சியம், உலக நாடுகள் வியந்து பார்க்கும் பெரியகோவில், பாரம்பரியத்தை பறைசாற்றும் அரண்மனை, சங்கீத மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா, பீரங்கி மேடு, ராஜ ராஜ சோழன் மணி மண்டபம் என்று ஏராளமான வரலாற்று சிறப்புகள் தஞ்சாவூரில் அடங்கி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகள், திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி என மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி. முக்குலத்தோருக்கு அடுத்தபடியாக முத்தரையர், இஸ்லாமியர் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு கணிசமாக வசிக்கிறார்கள். தஞ்சாவூர் மக்களவை தொகுதியை காங்கிரஸ் 9 முறையும், திமுக 7, அதிமுக 1 முறையும் கைப்பற்றியுள்ளது.
திமுகவில் ச.முரசொலி, அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவில் பெ.சிவநேசன், பாஜகவில் கருப்பு முருகானந்தம், நாம் தமிழர் கட்சியில் ஹூமாயூன் கபீர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் ஐந்து முறை வென்ற முன்னாள் மத்தியமைச்சரும், சிட்டிங் எம்பியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தான் போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், புதியவருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் திமுக வேட்பாளராக ச.முரசொலியை அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது திமுக தலைமை. பாரம்பரியமான திமுக குடும்பத்தை சேர்ந்தவர். தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாராக உள்ளார். ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்ற பிறகு இரண்டு இடங்களில் 50 அடி உயர கொடி கம்பத்தில் திமுக கொடி ஏற்றும் நிகழ்வை விமர்சையாக நடத்தினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் முரசொலியை வெகுவாக பாராட்டினார்.
பாஜகவில் அதிரடி அரசியலுக்கு பெயர்போன கருப்பு முருகானந்தம் களம்காண்கிறார். அதிகம் ஆடாதீர்கள் ஒட்ட நறுக்கி விடுவோம்” என்று அமைச்சர்களை நேரடியாகவே எச்சரித்தார். அமைச்சர்களின் அலுவலக வாசலுக்கே சென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். கடந்த வருடம் சிட்டிங் எம்பி பழனிமாணிக்கம் ஒரு விழாவில் பாஜகவை விமர்சனம் செய்ததாக கூறி கருப்பு முருகானந்தம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது, இரண்டு முறை மத்திய அமைச்சர், நான்கு முறை எம்பி என ஆறு முறைப் பதவியிலிருந்த பழனிமாணிக்கம், தஞ்சாவூர் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார் என்று கடும் விமர்சனம் செய்தார். ஒன்றிய தலைவரில் தொடங்கி தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளராக உயர்ந்துள்ளார்.
அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவில் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் பெ.சிவநேசன் போட்டியிடுகிறார். இவர் தஞ்சையில் 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். அதிமுகவுடன் கூட்டணியே பலமே இவரின் பலமும் கூட.
தஞ்சையில் திமுக,– பாஜக, தேமுதிக என திரிசூல யுத்தம் நடைபெறுகிறது. சோழமண்டல தளபதி என்று சொல்லப்படும் ஒபிஎஸ் முன்னாள் அமைச்சர் அணியிலுள்ள வைத்தியலிங்கத்திற்கு இங்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதிமுக கவுண்டர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது அதில் முக்குலத்தோர் சமூகத்திற்கு முக்கியத்துவம் இல்லை என இபிஎஸ் பொறுப்பேற்ற முதலே விமர்சித்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக இந்த பகுதியில் அதிக பிரதிநிதித்துவம் பெறாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது.
அதிமுக நிர்வாகிகள் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளருடன் அவ்வளவு இணக்கமாக செயல்படுவது இல்லை. களத்திலேயே இல்லாத கட்சியுடன் கூட்டணி வைத்து பாடாய்படுத்தறாங்களே என விம்முகிறது இலைத்தரப்பு. இபிஎஸ், அண்ணியார் பிரச்சாரங்களால் களம் சாதகமாகும். கேப்டனுக்காக அனுதாப வாக்குகள் அதிகளவில் கிடைக்கும் எப்படியும் தேறிவிடலாம் என்று நினைக்கிறார் சிவநேசன்.
2014 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தம் 58 ஆயிரம் வாக்குகள் பெற்றார். கூட்டணி கட்சியான அமமுகவிற்கும் ஓரளவு வாக்குவங்கி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளதால் வாக்கு உயர வாய்ப்புள்ளது. அடிக்கடி பிரதமர் மோடியின் தமிழக விசிட், கூட்டணிக் கட்சிகளின் பலம் போன்றவை தனக்கு கை கொடுக்கும் என நம்புகிறார்.
தஞ்சையின் வெற்றி உன்னுடைய பொறுப்பு என திமுக தலைமை அமைச்சர் அன்பில் மகேஷிடம் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டிய வியூகங்களை வகுத்து, நிர்வாகிகளுக்கு கிளாஸ் எடுத்துள்ளதால் உடன்பிறப்புக்கள் துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகின்றார்.
பேதாக்குறைக்கு, மாவட்ட செயலாளர்களான துரை சந்திரசேகரன், அண்ணாதுரை, பூண்டி கலைவாணன் ஆகியோரில் யார் அதிகமாக வாக்குகளை பெற்றுத்தருகிறார்களோ அவருக்கு 6 பவுன் தங்கச் சங்கிலியை பரிசாக அளிப்பேன் என்று அன்பிலார் கூட்டத்திலேயே வாக்களித்து தேர்தல் களத்தை தெறிக்கவிட்டுள்ளார் அன்பிலார்.
திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியே நேரடியாக களமிறங்கியுள்ளது. எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் அன்பில் மகேஷ், மேயர் சண்.ராமநாதன், துரை.சந்திரசேகரன் மற்றும் இன்னும் பல கட்சி முக்கியஸ்தர்களின் ஆதரவு முரசொலிக்கு பக்க பலமாக உள்ளது. திமுகவின் சாதனைத்திட்டங்கள், தற்போதைய தேர்தல் வாக்குறுதிகள், கூட்டணி பலம், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பிரசாரம் போன்றவைகள் வெற்றிக்கு வித்திடும் என்றனர். முரசொலி எளிமையானவர், அமைதியானவர், யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டர், இந்த நிலைக்கு அவர் உயர்ந்ததற்கு காரணமே அவரின் குணம்தான் என்கிறார்கள்.
தற்போதைய கள நிலவரப்படி திமுக வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. இரண்டாம் இடம் அதிமுகவிற்கா இல்லை பாஜகவிற்கா என்பது தான் இழுபறியாக உள்ளது.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.