டெல்டாவின் கடைக்கோடிப் பகுதியான நாகப்பட்டினத்தில், விவசாயம்தான் பிரதான தொழில். தமிழகத்திலேயே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்திருக்கக்கூடிய தொகுதி நாகப்பட்டினம். நீண்ட கடற்கரையைக்கொண்ட நாகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இருக்கின்றன. மீன் ஏற்றுமதியில் தமிழக அளவில் நாகை துறைமுகம் இரண்டாமிடத்தில் இருக்கிறது. வேதாரண்யம் பகுதியில் உப்பளங்கள் நிறைந்திருப்பதால், உப்பு உற்பத்தியிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது இந்தத் தொகுதி. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியான இ.கம்யூ கட்சியில் எம்.செல்வராஜ் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி-யாக பதவியேற்றார்.
நாகை மக்களவை தொகுதியில், நாகை மாவட்டத்தில் உள்ள நாகபட்டிணம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளும் அடங்கும். இங்கு, பட்டியலினத்தவர்களுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர், முக்குலத்தோர், வன்னியர், பிள்ளைச் சமூகத்தினரும் கணிசமான அளவில் வசிக்கிறார்கள்.
நாகை தொகுதியில் திமுக கூட்டணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வை.செல்வராஜ், அதிமுகவில் சுர்சித் சங்கர், பாஜகவில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் கோவிந்த், நாம் தமிழர் கட்சியில் எம்.கார்த்திகா உள்பட 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழக மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவு வேட்பாளர்களே களம் காணும் தொகுதி இதுதான். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ், அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர், மாணவர் மன்றம், இளைஞர் மன்றம், மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 14 ஆண்டுகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினராக 3 முறை, திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக ஒரு முறையும் இருந்துள்ளார். தற்போது கட்சியில் இரண்டாவது முறையாக மாவட்ட செயலராக செயல்பட்டு வருகிறார். கூலித் தொழிலாளர்கள் அதிமுள்ள பகுதி என்பதால் அவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து வாக்குச்சேகரித்து வருகின்றனார்.
அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கர் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்த இவர், இளநிலை தொழிலாளர் மேலாண்மை, முதுநிலை சமூக சேவை, எல்.எல்.பி. மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயின்றவர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்த சுர்சித் சங்கருக்கு மாநில விவசாய அணி செயலர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அதிமுவில் இணைந்தார். அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால திட்டங்களைக் கூறி வாக்குச்சேகரித்து வருகின்றார்.
பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம். ரமேஷ் கோவிந்த், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஜி.முருகையனின் மகன் ஆவார். அதிமுகவிலிருந்து பாஜகவில் சென்றார். பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா, கோவையைச் சேர்ந்த பொறியாளர் மு.கார்த்திகா தொகுதியில் உள்ள பிரச்னைகளை அறிந்து, அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நாகை மக்களவை தொகுதி முழுக்க, முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமான தொகுதி என்பதால், இம்முறையும் வை.செல்வராஜ் தான் வெற்றிபெறுவார் என்கிறார்கள்.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.