காவிரியின் கடைமடையான மயிலாடுதுறையில் தான் காவிரி தனது பயணத்தை முடித்து கொள்கிறது. சிலப்பதிகாரத்தில் சதுக்கபூதம் காத்த பூம்புகார் ஊர் இந்தத் தொகுதியில் இருக்கிறது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள், கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர்(தனி), சீர்காழி(தனி) உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு, வன்னியர்கள் பெரும்பான்மையாகவும், அடுத்த நிலையில் பட்டியல் இனத்தவர்களும், இஸ்லாமியர்களும் கணிசமாக வசிக்கின்றனர். இவர்களே தேர்தலில் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கின்றனர்.
திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியில் ஆர்.சுதா ராமகிருஷ்ணன், அதிமுகவில் பி.பாபு, பாஜக கூட்டணி பாமகவில் ம.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியில் காளியம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், ராகுல் காந்தியின் நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி, திருநாவுக்கரசர் ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்த நிலையில் ஒருவருக்கு கொடுத்தால் ஒருவருக்கு பொல்லாப்பு என்பதாலும், பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும், கடலூருக்கு விருப்ப மனு அளித்த புதியவரான ஆர்.சுதா ராமகிருஷ்ணனை நீண்ட இழுபறிக்கு பின்னர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை.
திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். கடந்த 2020-ம் ஆண்டு முதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளார். ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான யாத்திரையில் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார் என்பது இவரின் அரசியல் அடையாளம்.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் நிலையில், மீண்டும் பாராளுமன்ற தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் கொந்தளித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர், திமுககாரன் தான் ஓட்டு போட்டு காங்கிரஸ் கட்சிக்காரரை எம்எல்ஏவாக உருவாக்கினோம் என காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமாரிடம் கடுமையான வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது.
அதிமுகவில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார். பவுன்ராஜ் இரண்டு முறை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது செல்வாக்கை பயன்படுத்தி மகனுக்கு சீட் வாங்கிக்கொடுத்துள்ளார். இளைஞரான பாபு மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்து வருகிறார். இவர் முழுக்க முழுக்க தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலில் களம் காண்கிறார்.
திமுக-காங் உறவில் இங்கு இணக்கம் இல்லை. தேர்தல் பணிகளில் தொய்வு, தொகுதிக்கு அறிமுகமற்றவர் போன்ற மைனஸ்களை மக்கள் மன்றத்தில் முறையிட்டு வாக்குச் சேகரிக்கிறார். இளைஞர் என்பதால் தொகுதி மக்களை பிரசாரம் செய்து கவர்கிறார்.
பாஜக கூட்டணி கட்சியான பாமகவில் ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக உள்ளார். தொடக்கத்தில், பாமக மாணவர் சங்க தலைவராக பொறுப்பேற்று தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளராக உள்ளார். துவக்ககாலம் முதல் பாமகவின் அனைத்து போராட்டங்களிலும், குடந்தையில் நடைபெற்ற பாட்டாளி மாணவர் சங்க மாநாடு, ஆடுதுறையில் நடைபெற்ற ராமதாஸ், பழனிபாபா பங்கேற்ற சிறப்பு பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கெடுத்துள்ளார்.
தனது சமூக வாக்காளர்களையும், கூட்டணி கட்சியினரையும் முழுதாக நம்பியுள்ளார். வன்னியர்கள் வாக்கு தனக்குத்தான் கொத்தாக கிடைக்கும் என நினைக்கின்றார். அதோடு, ஆடுதுறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தான் தலைவராக இருந்து செய்த திட்டங்களை கூறி வாக்குச் சேகரிக்கிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் போட்டியிடுகிறார். நாதகவின் நட்சத்திர வேட்பாளர்களில் இவரும் ஒருவர். நாகபட்டினத்தை சேர்ந்த இவர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர். 2019 மக்களவைத் தேர்தலில் காளியம்மாள் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அதேபோல, 2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு 17 ஆயிரம் வாக்குகள் பெற்றார். எவருடனும் கூட்டணி இல்லை. பணம் கொடுக்காமலே நாங்கள் மூன்றாம் இடத்தில் உள்ளோம் விரைவில் இரண்டாம், முதலாம் இடத்திற்கு முன்னேறுவோம் என தேர்தல் களத்தில் சூளுரை ஏற்கிறார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, பாமக என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இந்த தொகுதிக்கு அமைச்சர் மெய்யநாதன் தான் பொறுப்பு என்பதால் தேர்தல் பணிகளில் குறையில்லை. அனைவரையும் அனுசரித்து செல்கின்றார். தொண்டர்களை தட்டிக் கொடுத்து தேர்தல் பணி செய்யவைக்கின்றார். வெற்றிக்காக அமைச்சர் பாடுபடுகிறார். தனக்கு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி டெல்லிக்கு சென்றாக வேண்டும் என்ற முடிவோடு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். பெண் வேட்பாளர் என்பதால் பெண்களின் கவனம் ஆர்.சுதா ராமகிருஷ்ணன் மீது முழுமையாக திரும்பியுள்ளது. முன்னேறுகிறார் சுதா..
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.