சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் என உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களும், வரலாற்றுத் தடயங்களும், நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 2,800 ஏக்கர் பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகளும் நிரம்பிய நாடாளுமன்றத் தொகுதி சிதம்பரம். இந்த தொகுதியில் 7,49,623 ஆண் வாக்காளர்கள், 7,61,206 பெண் வாக்காளர்கள், 86 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15,10,915 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் வன்னியர் சமூக மக்களும், பட்டியலினச் சமூக மக்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். உடையார், செட்டியார், முதலியார், மூப்பனார், கார்காத்த வேளாளர் உள்ளிட்ட சமூக மக்களும் வாழ்கின்றனர். இந்த தொகுதியை பொறுத்தவரை அரசியல் பலத்தைவிட சாதிய பலமே மேலோங்கி நிற்கிறது.
கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்ட மன்ற தொகுதிகள், அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது இந்த சிதம்பரம் மக்களவை தொகுதி.
கடந்த 2019 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து விசிக தலைவர் திருமாவளவன் வெற்றிபெற்று எம்.பி-யாக உள்ளார். மீண்டும் அவரே வேட்பாளராகியுள்ளதால், தமிழகமே சிதம்பரம் தொகுதியை உற்று கவனித்து வருகின்றனர். திமுக கூட்டணி விசிக சார்பில் திருமாவளவன், அதிமுகவில் மா.சந்திரகாசன், பாஜகவில் பி.கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சியில் இரா.ஜான்சிராணி ஆகியோர் களம் காண்கின்றனர்
குன்னம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், அரியலூர், ஆகிய தொகுதிகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வசம் உள்ளது. புவனகிரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன. திருமாவளவனுக்காக தமிழக அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வெ.கணேசன், ஆகியோர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து உள்ளது.
அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் பெரம்பலூர் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளராக உள்ளார். வேளாண் துறையில் பணியாற்றிய இவர், கட்சிப் பணிக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன், அரியலூர் மாவட்ட கவுன்சிலராக, தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சந்திரகாசன் இந்த தொகுதியில் உள்ள அதிமுக வாக்குவங்கியை நம்பி களம் காண்கிறார்.
பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினி, திருவண்ணாமலையை சேர்ந்தவர். 2011-ல் அதிமுக சார்பில் வேலூர் மேயரானார். 2017-ல் பாஜகவில் இணைந்து, தற்போது அக்கட்சியில் மாநிலச் செயலாளராக உள்ளார்.தொகுதிக்கு புதியவரான கார்த்தியாயினி, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியை நம்பி களம் இறங்கியிருக்கிறார்.
இவர்களுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சி ராணியும் வழக்கமான வாக்குகளை வசப்படுத்த, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
‘சில அதிருப்திகள் திருமாவளவன் மீது மக்களிடம் இருந்தாலும், தன் சாதிய வாக்குகள், திமுக கூட்டணி, பொறுப்பு அமைச்சர்களின் பணி போன்றவைகள் பலம் சேர்க்கின்றன. அதேபோல மக்களை பாதிக்கும் வகையிலான நாட்டின் எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், அதற்காக முதலில் குரல் எழுப்புபவர். ஒரு கட்சியின் தலைவராகவும், சமூக செயல்பாட்டாளராகத் திகழும் திருமாவளவனே மீண்டும் வெற்றிபெறுவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.