கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டியில் விளைவிக்கப்படும் முந்திரியும் பலாவும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய அரசின் என்.எல்.சி பொதுத்துறை நிறுவனமும், திருவருட்பா அருளிய வள்ளலாரின் வடலூர் சத்திய ஞான சபையும் இந்த தொகுதியின் சிறப்பம்சங்கள்.
கடலுார் மக்களவை தொகுதியிலுள்ள, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி ஆகிய சட்டசபை தொகுதிகள் தி.மு.க., வசம் உள்ளது. இதன் கூட்டணி கட்சிகளான தமிழக வாழ்வுரிமை கட்சியிடம் பண்ருட்டி தொகுதியும், விருத்தாசலம் தொகுதி காங்., வசம், காட்டுமன்னார்கோவில் வி.சி., கட்சி வசம் உள்ளன. இந்தத் தொகுதியில், வன்னியர் மற்றும் பட்டியிலினச் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். மீனவர், உடையார், யாதவர், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினரும் கூடி வாழ்கிறார்கள்.
கடலுார் மக்களவை தொகுதியில் பிரதான கட்சிகளான தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் ஆரணி சிட்டிங் எம்.பி., விஷ்ணு பிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
ஆரணி தொகுதியின் காங்கிரஸ் சிட்டிங் எம்பியும், வேட்பாளருமான கே.விஷ்ணுபிரசாத்தின் தந்தை எம்.கிருஷ்ணசாமி இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராக இருந்தவர். அதோடு இவர் பா.ம.க தலைவர் அன்புமணியின் மைத்துனரும் கூட. சொந்த ஊர் செய்யாறு அருகேயுள்ள மேலப்பட்டு கிராமம். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்த இவர், அடுத்த தலைமுறை காங்கிரஸ் வாரிசாக வலம்வந்து கொண்டிருக்கிறார். விஷ்ணு பிரசாத் ஆரணி எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் செய்யாததால் தொகுதி மாறி இங்கு போட்டியிடுகிறார்.
பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பல்வேறு முகங்களைப் பெற்றுள்ள தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இவர் தமிழ்த் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.
தங்கர் பச்சான் திரைத்துறையை சேர்ந்த பிரபலம் என்பதால், தொகுதி வாக்காளர்களை தன் பக்கம் ஈர்ப்பார். பாமகவுக்கு இங்கு நிலையான வாக்குவங்கி உள்ளது. மாநிலக் கட்சி மீது அதிருப்தியில் இருப்பவர்களின் வாக்குகள் பாஐகவிற்கு வந்துசேரும் என்கிறார்கள். எனினும் எளிமையான பிரச்சாரத்தின் வாயிலாக வாக்காளர்களை கவர்கிறார். ஆனால் வெற்றிக்கு நோ சான்ஸ் என்கின்றனர்.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-வில் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். 2011 கடலுார் மக்களவையில் ஏற்கனவே இதே கூட்டணியில் தொகுதியில் உள்ள விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் வென்றுள்ளது. இதனால் கடலுார் தொகுதியில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சிவக்கொழுந்து ஓரளவு அறிமுகம் என்பது கூடுதல் பலம் என்கிறார்கள். இருப்பினும் வெற்றிக்கு வழியில்லையாம்?
கடந்த 2019 மக்களவை தேர்தலில் தி.மு.க., 5,22,160 ஓட்டுகள் பெற்று தொகுதியைக் கைப்பற்றியது. விஷ்ணு பிரசாத் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ச்சியாக பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். திமுக வலுவான கூட்டணியுடன் களத்தில் உள்ளது. ஆளும் திமுகவின் சாதனைத் திட்டங்கள், மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற பொதுவான எண்ணம், மாவட்ட அமைச்சர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் களப் பணி போன்றவைகள் கே.விஷ்ணுபிரசாத்தின் வெற்றிக்கு “கை” கொடுக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.