தமிழகத்தின் மத்தியப்பகுதியும், இரண்டாம் தலைநகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுகவில் துரைவைகோ அதிமுகவில் கருப்பையா, பாஜக கூட்டணி கட்சியான அமமுகவில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியில் டி.ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை, கந்தர்வக் கோட்டை (தனி) ஆகிய தொகுதிகளும் திருச்சி மக்களவை தொகுதிக்குள் வருகின்றன. இந்த தொகுதியில், முத்தரையர், வெள்ளாளர், முக்குலத்தோர், இஸ்லாமியர், நாயுடு, ரெட்டியார், உடையார், செட்டியார், நாடார், யாதவர், கிறிஸ்தவர்கள், பிராமணர்கள், பட்டியல் சமூகத்தினர் எனப் பல்வேறு சமூக மக்களும் கூடி வாழ்கிறார்கள்.

1951 முதல் தேர்தலைச் சந்தித்துவரும் இந்தத் தொகுதியில், காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சிகள் அதிக முறை வென்றிருக்கின்றன. மூன்று முறை அதிமுகவும்,திமுக, மதிமுக தலா ஒரு முறையும் வென்றுள்ளது.

திமுகவின் கூட்டணிக் கட்சியான மதிமுகவின் நிறுவனர் வைகோவின் மகனான துரை வைகோ இங்கு போட்டியிடுவதால் திருச்சி மக்களவை தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. திருச்சி தொகுதியில் மதிமுகவுக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக 63.68 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அமைச்சர் கே.என்.நேரு உள்ளதால் தேர்தல் பணி சுறுசுறுப்பாக உள்ளது.

அதிமுகவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ப.கருப்பையா போட்டியிடுகிறார். இவர் வேறு யாரும் இல்லை அரசு மணல் ஒப்பந்ததாரர் மணல் கரிகாலன் தம்பி தான். இவர், தற்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராக உள்ளார். 2011 முதல் கட்சியில் சில பொறுப்புக்களில் இருந்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார். கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் கொடுத்துள்ளார். மருத்துவ முகாம்களும் அமைத்துள்ளார். மாணவர்களுக்கு கல்வி நிதியும், 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு கணினி, மிதிவண்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளார் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக சார்பாக செந்தில்நாதன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி 47-வது வார்டு கவுன்சிலராக அவர் உள்ளார். அமமுகவுக்கு திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளது. கடந்த தேர்தலில் அமமுகவில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றார். அந்த நம்பிக்கையில் பலத்தை காட்ட டிடிவி திருச்சியை கேட்டு வாங்கியுள்ளார்.

இந்த தொகுதியில் போட்டி என்பது, மதிமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையில்தான். இந்த தொகுதியில் திமுக தொண்டர்கள் அதிக முறை கூட்டணி கட்சிகளுக்கே வேலை செய்து ஓய்ந்து விட்டதால் இன்று மதிமுகவுக்கும் வேலை செய்வதில் அதீத சலிப்பில் உள்ளனர். துரைவைகோ தரப்பில் யாரையும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை, திமுகவினரையும் சரியாக ட்ரீட் செய்வதில்லையாம்.

திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எவ்வளவோ சொல்லியும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என கறார் காட்டி விட்டார் துரை வைகோ. தனிச்சின்னமான தீப்பெட்டியில் போட்டியிடுகிறார். புதிய சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதாக தொண்டர்கள் கூறுகின்றனர்.

துரை வைகோ அரசியல் வாழ்வில் நுழைந்து தான் முதன்முதலாக சந்திக்கவிருக்கும் தேர்தல் என்பதால் இதில் வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தம் உள்ளது. இதில் தான், தன் மகனின் அரசியல் எதிர்காலமே உள்ளது என வைகோவும் கள நிலவரத்தை அவ்வப்போது கேட்டு அறிந்து கொள்கிறார்.

திருச்சியை திமுகவிடம் இருந்து மீட்க வேண்டும் என அதிமுகவினர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். இளைஞரான கருப்பையா துடிப்புடன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இளைஞர் படையும் இவருடன் அணி வகுக்கிறது. கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தொகுதி முழுக்க உள்ள சாதி வாக்குகள் பலம் கொடுக்கும்.  பணபலம் உள்ளதால் தொண்டர்கள் சோர்வடையாமல் உற்சாகத்துடன் உள்ளனர்.

நட்சத்திர வேட்பாளரான துரை வைகோவிற்கு எதிர்பார்த்ததை விட புதுமுகமான கருப்பையா கடுமையாக டஃப் கொடுத்து வருகிறார்.. வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கிறார்கள்.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.