கோட்டையையே பிடித்துவிட்டோம் ஆனால் கோவையை பிடிக்க முடியவில்லையே என்ற பிரஸ்டீஜ் பிராப்ளம் திமுகவுக்கு உள்ளது. கோவை மாவட்டத்தில் திமுகவிற்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதால் இம்முறை திமுகவே நேரடியாக கோவை மக்களவை தொகுதியில் களமிறங்கி ஒரு கை பார்த்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது. கடந்த முறை போனது போகட்டும் ஆனால் இம்முறை விடவே கூடாது என வெற்றிக்காக அதிமுக மல்லுக்கு நிற்கிறது. இப்ப இல்லைன்னா இனி எப்பவுமே இல்ல என்று வம்படியாக பாஜகவும் கோவையில் கொடிநாட்ட முட்டி மோதுகிறது.

கோவை மக்களவைத் தொகுதியில், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், பல்லடம் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதுவரை நடைபெற்ற 17 தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறையும் இடதுசாரிகள் 7, திமுக 2, பாஜக 2, அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த சில தேர்தல்களில் அதிமுக, திமுகவில் கூட்டணியில் இடம்பெற்ற தேசிய கட்சிகளுக்கே பெரும்பாலும் கோவை மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது.

திமுகவில் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் ராமச்சந்திரன், பாஜகவில் அண்ணாமலை, நாதக சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனினும், திமுக, அதிமுக, பாஜக இடையே இங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

திமுக வேட்பாளர்-கணபதி ராஜ்குமார்

திமுக சார்பில் கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், கோவை மாநகர் மாவட்ட அவைத் தலைவரான முனைவர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் அபிமானத்தை பெற்றவர். கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். படித்தவர், பண்பாளர் என்பதால் நாயுடு சமூகத்தை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன் மற்றும் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை ஆகியோரை வீழ்த்த தகுதியானவர்.அதேபோல அதிமுகவில் இருந்த அனுபவம் காரணமாக எஸ்.பி.வேலுமணியின் வியூகங்களும் எதிர்வினையாற்றவும், வேலுமணியை எதிர்க்கவும் ரைட் சாய்ஸ் என முடிவு செய்து திமுக தலைமை களமிறக்கியுள்ளது.

அதிமுக வேட்பாளர்-சிங்கை ராமச்சந்திரன்

அதிமுக சார்பில் 36 வயதே ஆன இளைஞா் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர். இவரது தந்தை கோவிந்தராசு சிங்காநல்லுார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. பாசறை செயலாளராகவும், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராகவும் பணியாற்றியவர். சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இ-சேவை மையங்கள் அமைத்து மக்களுக்கு இலவச சேவை செய்து வருகிறார். துடிப்பான இளைஞர்.தொகுதியில் கணிசமாக உள்ள நாயுடு சமூக ஓட்டுக்களை கவர்வார். என்கின்றனர்.

பாஜக வேட்பாளர்-அண்ணாமலை

பாஜக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை போட்டியிடுகிறார். என் மண்-என் மக்கள் யாத்திரை, கோவையில் பிரதமர் மோடியின் வாகன பிரசாரமும் பாஜகவுக்கு வெற்றியை தரும் என்கின்றனர். கோவைக்குள் மீண்டும் ஓர் ஆளுமை வர குறிப்பிட்ட பெண் பிரமுகர் விரும்பவில்லை. எனவே, உள்ளடி வேலைகள் பலமாக இருக்கும் என்கிறார்கள்.

செந்தில் பாலாஜியின் மேஜிக்கும், திமுகவின் திட்டங்களும் கைகொடுக்கிறது. அதிமுகவின் கோட்டையாக கோவையை வைத்திருப்பது எஸ்.பி.வேலுமணியை சார்ந்ததால் எளிதில் விடமாட்டார் டஃப் கொடுப்பார். அண்ணாமலையின் வெற்றியை பாஜகவின் எதிர்காலமாக பார்ப்பதால் களப்பணியில் சுறுசுறுப்பு கூடுகிறது.

செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால்,இந்த தொகுதியின் தேர்தல் அசைன்மெண்டை அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனால், வெற்றியை உறுதி செய்வதற்காக கோவையிலேயே முகாமிட்டு இரவு,பகல் பாராமல் கடுமையாக பணியாற்றி வருகிறார் டிஆர்பி ராஜா.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 45.66. பாஜக 31.34. ம.நீ.ம. 11.6, நாம் தமிழர் 4.84, நோட்டா 1.85 சதவீதம். இந்த சதவீதங்களின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.நீ.ம. கட்சிகளின் வாக்குகள் சேரும்போது திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்வார்.

அதோடு, இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் 12 சதவீத வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதால் களம் திமுகவிற்கு சாதகமாகியுள்ளது. ஏற்கெனவே கோவை மேயராக மக்களுக்கு அறிமுகமானவர் ஃபெமிலியர் பேஸ் என்பதால் வாக்காளர்கள் ரிஸ்க் எடுக்க மாட்டர்கள் அவருக்கு வெற்றி மிக எளிதாக உள்ளது என்கிறார்கள்.

ஆக, “கோவை மக்களவையை திமுக தனதாக்கும்” என்கிறார்கள்.