தமிழகத்தில் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர், பின்னலாடைத் தொழிலில் உலகளவில் கோலோச்சி வருகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாகவும் உள்ளது. பின்னலாடைத்துறை மூலம் மட்டும் ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறுவதால், நாட்டின் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. பல்வேறு மாநில மக்களும் ஒன்றாக வேலை பார்க்கும் இடம் என்பதால், ‘மினி இந்தியா’ என்கிற அடைமொழியும் திருப்பூருக்கு உண்டு.

திருப்பூர் மக்களவை தொகுதியில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய 3 தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், எஞ்சிய 4 தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் வருகின்றன. இதனால், வெற்றி வாய்ப்புக்கான வேட்பாளர் பெரும்பாலும் ஈரோடு மாவட்ட மக்களை சார்ந்து இருக்க வேண்டியதிருக்கும். இரண்டு முறை அதிமுகவும், ஒரு முறை திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த மக்களவை தொகுதியை கைப்பற்றியுள்ளது.

கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினரும், அருந்ததியர் சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த எண்ணிக்கையில், இஸ்லாமியர், முதலியார், செட்டியார், பிற பட்டியலினச் சமூக மக்கள் வாழ்கிறார்கள். அந்தியூர் தொகுதியிலுள்ள மலைப் பகுதிகளில் பரவலாகப் பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள்.

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.சுப்பராயன், பாஜகவில் ஏ.பி.முருகானந்தம், அதிமுகவில் அருணாச்சலம் அகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிட்டிங் எம்பியான கே.சுப்புராயன்  மீண்டும் களமிறங்குகிறார். 1969-ல் தனது 22-வது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டு குழுத் தலைவராகவும் அகில இந்திய ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் துணைத் தலைவராகவும், பனியன் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மிகுந்த அனுபவம் பெற்றவர். 76 வயதான போதும் இன்றுவரை அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். தொழிலாளர்கள் அதிகமான இருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக பார்க்கப்படுகிறது.

அதிமுக வேட்பாளராக அருணாச்சலம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரான இவர், பெருந்துறை பேரூராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதால், இரட்டை இலையே போதும் எங்களது வெற்றிக்கு என்கின்றனர். தொகுதிக்குள் இருக்கும் அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களின் தேர்தல் பணிகள் பலமாக பார்க்கப்படுகிறது. இபிஎஸ் கவுண்டர் என்பதால் அவருக்காக வாக்குகளும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மற்றபடி மாஸ் வெயிட் இல்லை என்கிறார்கள்.

பாஜக வேட்பாளர், சட்டை அணியாமல் வந்து வேட்புமனுத்தாக்கல் செய்ததை பாஜகவினரே ரசிக்கவில்லையாம். இதென்ன சுயேட்சை வேட்பாளர் போல இப்படி ஒரு கூத்து என்கிறார்கள். ஏ.பி.முருகானந்தம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர். கட்சியிலும் செல்வாக்கு மிக்கவர். கொங்கு மண்டலம் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கும் பகுதியாக பார்க்கப்படுவதால், இம்முறை கண்டிப்பாக சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கட்சிக்குள் புதியவர்களை கொண்டு வந்து இளைஞரணிக்கு பலமான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது என்கிறார்கள் பாஜகவினர். 2009 தேர்தலில் பாஜக தனித்து களம் கண்டபோது அக்கட்சி 1.55 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. கூட்டணி பலம், தற்போதைய பாஜக வளர்ச்சி போன்றவற்றால் வாக்குகள் வேண்டுமானால் கூடுதலாக கிடைக்கும். ஆனால் ஏ.பி.முகானந்தம் வெற்றிக்கு எடுபடுவாரா என தெரியவில்லை என்கிறார்கள்.

இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, பாஜக என மும்முனைப்போட்டி நிலவுகிறது.

சிட்டிங் எம்பி சுப்புராயன் எளிமையானவர், பண்பாளர், எந்த நேரமும் தொடர்புகொண்டு பேசுமளவுக்கு மக்களுக்கு நெருக்கமாக இருப்பார். பர்கூர், அந்தியூர் மலைப்பகுதிகளில் அடிக்கடி சென்று பழங்குடி மக்களை சந்திப்பது, அவர்களின் அடிப்படை வசதிகளுக்காக அதிக நிதியை ஒதுக்கியது, கட்சிப் பிரதிநிதிகளை நியமித்து குறைகளைக் கேட்டறிந்து செயல்பட்டது போன்றவைகள் பழங்குடியின மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

திருப்பூரில், வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சனை ஏற்பட்டபோது, அதை சுப்பராயன் கையாண்டவிதம் பாராட்டைப் பெற்றது. தொகுதி மக்களுக்கு நன்கு பரிட்சையப்பட்ட முகம் என்பதால் புதிய வேட்பாளர்களை வாக்காளர்கள் பொருட்படுத்தவில்லை. கடந்த 2019 தேர்தலில் சுப்பராயன் 45.60 சதவீத வாக்குகளை பெற்றார். தற்போது கூட்டணி பலமும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி போன்ற காரணங்களால் வெற்றிக்கு அதிகப்படியான வாய்ப்பு மீண்டும் சுப்புராயனுக்கே உள்ளது என்கின்றனர். தோழர் வசமாகும் டாலர் சிட்டி..

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.