சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்வதில் இவரை விட்டால் வேறு பொருத்தமான ஆள் கிடையாது. என்பதை மனதில் வைத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் டி.எம்.செல்வகணபதிக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பளித்துள்ளது. இது எடப்பாடிக்கான முதல் செக் என்கின்றனர்.

சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
திமுகவில் டி.எம்.செல்வகணபதி, அதிமுகவில் விக்‌னேஷ், பாஜக கூட்டணியான பாமகவில் அண்ணாதுரை, நாம் தமிழா் கட்சியில் மனோஜ்குமாா் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சேலத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 இடங்களை அதிமுக-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட்டாலும், சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு இடத்தைத்தான் திமுக-வால் வெல்ல முடிந்தது. இதை மக்களவைத் தேர்தலில் மாற்றிக்காட்டும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. அதனால்தான் சேலத்தில் உதயநிதியை முன்னிலைப்படுத்தி இளைஞரணி மாநாட்டை நடத்தியிருப்பதால், சேலத்தை வெல்வதை முக்கியமானதாகப் பார்க்கிறது திமுக.

`மக்களவைத் தேர்தலில் மற்ற தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறுவதைவிடவும், சேலம் தொகுதியில் வெற்றிபெறுவது மிக மிக அவசியம். உள்ளாட்சித் தேர்தலைப்போல கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது’ என இபிஎஸ் கடுமை காட்டி வருகிறார்.

அதனால் எல்லா வகையிலும் தகுதியான எம்பி கேண்டிடேட்டான ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணியின் உறவினரும், ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவனின் மகனும், திண்டமங்கலம் ஊராட்சித் தலைவர் தனபாக்கியத்தின் மகனும், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளருமான இளைஞர் விக்னேஷ் என்பவரை களமிறக்கியுள்ளாா இபிஎஸ்.

திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எம்பி தேர்தலில் களமிறங்குவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். 1991-ல் அதிமுக அரசில் அமைச்சர். 1999-ல் சேலம் எம்பி, 2008-ல் திமுக-வில் இணைவு. திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர். 2010-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என அனுபவப் பட்டியல் நீளுகிறது. எளிமையான அணுகுமுறை உடையவர். நல்ல மனிதர். சேலம் இளைஞரணி மாநாட்டை சிறப்பாக செய்ததால் திமுகவின் குட் புக்கில் உள்ளார். மாநாடு நடைபெற்று முடிந்தபின் தான் திமுகவின் இமேஜ் டாப் வெவலில் உள்ளதாக கூறுகின்றனர்.

  • இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது வன்னியர்கள் வாக்கு என்பதால் தான் பாமகவை எப்படியாவது கூட்டணிக்குள் இழுக்க எடப்படி முயற்சித்தார் ஆனால் முடியவில்லை என்கிறார்கள்.

2016 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்டு 57 ஆயிரம் வாக்குகள் பெற்ற அதே அண்ணாதுரை தான், இன்றைய சேலம் மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்கியுள்ளது பாமக. கட்சியில் பல்வேறு பொறுப்புக்களில் இருந்துள்ளார். ராமதாசுக்கு நெருக்கமானவர். பாமகவின் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் முன் நின்று வழி நடத்துபவர். திமுக, அதிமுக என இரு வேட்பாளர்களுக்கும் இவர் டஃப் கொடுப்பார் என்பதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் மாவட்டம், தன் சமூக வாக்கை நம்பி களமிறங்கியுள்ளார். சேலம் மேற்கு தொகுதியின் பாமக எம்எல்ஏ அருள் ஃபீல்டு ஒர்க்கர் என்பதால் அதையும் பலமாக பார்க்கிறார்.

அதிமுக வேட்பாளர் விக்னேஷ்க்கு ஆதரவாக இபிஎஸ் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். சேலத்தை வென்றாக வேண்டும் என்பதை தன்மானப் பிரச்சனையாகப் பார்க்கிறார். மாவட்ட எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர் வேகத்தை காட்டி வருகின்றனர். அதிமுக வேட்பாளர் இளைஞர் விக்னேஷ் புதிய முகம். வன்னியர் சமூகத்தை சார்ந்தவர். தொகுதிக்குள் அறிமுகம் இல்லை என்பதால் வாக்காளர்கள் மத்தியில் பரவசமில்லை. முன்னாள் முதல்வர் என்ற இமேஜ் இனி இங்கு எடுபடாது என்கின்றனர். பாஜகவுடான கூட்டணியை முழுதாக முறித்துக்கொள்ளவில்லை என்ற சந்தேகத்துடன் சிறுபான்மை மக்கள் உள்ளதால் சிறுபான்மையினரின் சிதறிய ஓட்டுக்கள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது என்கின்றனர்.

இம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு இருப்பதால் தேர்தல் பணியில் சுணக்கம் என்பதே இல்லை. திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு பிரச்சாரத்திற்கு போகும் இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அனைத்து தரப்பிலும் அறிமுகம் உள்ளதால் வாக்காளர்கள் உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள். கட்சிக்காரர்கள் இரவு,பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி வருகிறார். ஆளுங்கட்சியின் மாஸ் டீம் ஓர்க், திமுகவின் திட்டங்கள், ஐடி விங்கின் பிரச்சார வியூகம், தாராள செலவுகள் என திமுகவுக்கு சாதகமான நிலையே சேலம் மக்களவையின் ரிப்போர்ட்டாக இருக்கிறது.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.