சீட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை கணேசமூர்த்திக்கு கட்டாயம் சீட் வேண்டும் என்பாராம் வைகோ.வைகோவிற்கு கணேசமூர்த்தி அவ்வளவு நெருக்கமானவர். கொங்கு பகுதியான ஈரோடு மக்களவை தொகுதியில் திமுகவிற்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதால் திமுகவே இங்கு நேரடியாக போட்டியிடுகின்றது.
2008 இல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிந்த ஈரோடு மக்களவை தொகுதியில், குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இதுவரை 3 தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ள இந்த தொகுதியில் 2 முறை மதிமுகவை சேர்ந்த சிட்டிங் எம்பியான கணேசமூர்த்தியும், ஒரு முறை அதிமுகவும் வென்றுள்ளது.
திமுகவில் கே.இ.பிரகாஷ், அதிமுகவில் ஆற்றல் அசோக்குமார், பாஐகவின் கூட்டணி கட்சியான தமாகவில் விஜயகுமார், நாம் தமிழர் கட்சியில் கார்மேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு மக்களவை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கினால் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளரான கே.இ.பிரகாஷ்க்குத்தான் நிச்சயம் சீட்டு என கூறிவந்தது உண்மையாகி அன்பில் மகேஷ், உதயநிதியின் ஆசியால் வேட்பாளராகிவிட்டார். கே.இ.பிரகாஷ் குடும்பம் பரம்பரை திமுகவினர்.
அதிமுகவில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். ஜெ.பேரவை துணைச்செயலாளர். கல்வி நிறுவனங்களின் தலைவராக உள்ளார். முன்னாள் எம்பி ஆக இருந்த சவுந்திரம் தான் இவரது தாயார். மொடக்குறிச்சி சிட்டிங் பாஜக எம்எல்ஏ சரஸ்வதிதான் இவர் மாமியார். ஆற்றல் அறக்கட்டளை மூலம் 10 ரூபாய்க்கு மலிவு விலை உணவகம், மருந்தகம் போன்ற பணிகளை செய்கிறார்.
இங்கு வெற்றிக்கான கடும் யுத்தம் திமுகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையேதான்.பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்றதும், நேராக எடப்பாடியை சந்தித்து சமீபத்தில்தான் அதிமுகவில் இணைந்தார் ஆற்றல் அசோக்குமார். தொகுதியை கைப்பற்ற கடுமையாக செலவு செய்து போராடி வருகிறார். இருப்பினும், அதிமுக சிட்டிங் எம்ஏல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பணிகளை செய்து வருவதும், கரன்சி கரைபுரண்டு ஒடுவதும் பாசிட்டிவாக உள்ளது.
திருச்செங்கோடு தொகுதியாக இருந்த போது பேராசிரியர் அன்பழகன் ஒருமுறை போட்டியிட்டுள்ளார்.அதன் பிறகு ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக இங்கு நேரடியாக போட்டியிடவில்லை. அந்த ஏக்கத்தை கே.இ.பிரகாஷை வைத்து தணித்துக்கொள்ள எண்ணுகிறது தலைமை. உதயநிதியின் அதிக கவனம் இந்த தொகுதியில் உள்ளது. எனவே, உள்ளடி வேலைகள் செய்தால் “அம்பேல்” தான் என்பதால், தேர்தல் பணிகள் ஜரூராகியுள்ளது.
தமாக பிரிக்கும் வாக்குகள் அதிமுக பாதிக்கும் என்கிறார்கள். கடந்த 2019 தேர்தலில் மநீம 47,719 வாக்குகள் பெற்றது. தற்போது மநீம திமுக கூட்டணியில் உள்ளதால் மேலும் வாக்குவங்கி கூடியுள்ளது. வலுவான திமுக கூட்டணி, தாராள செலவுகள், திமுகவின் திட்டங்கள், ஆளுங்கட்சி என்ற இமேஜ், மத்திய அரசுக்கு எதிரான பேரலை போன்றவைகள் வெற்றியை தேடித்தரும் என்கின்றனர்.
திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் கட்சியின் அடிமட்டத்திலிருந்து வந்தவர் என்பதால் எளிமையாக அணுக முடியும். கட்சி சீனியர்கள், அடிமட்டத் தொண்டர் என அனைவரையும் அனுசரித்துச் செல்வார். இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி வருகிறார். அதோடு, அமைச்சர்களான முத்துச்சாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் அனைத்து தொகுதிகளின் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் பின்னிப் பெடலெடுத்து வருகின்றனர்.
ஆக, தற்போதைய கள நிலவரப்படி ஈரோடு மக்களவை தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக உள்ளதால் கே.இ.பிரகாஷ்க்கு சுக்கிர திசைதான் என்கிறார்கள். கே.இ.பிரகாஷ் வெற்றிபெற்றால் ஈரோடு தொகுதியின் முதல் திமுக எம்பி என்ற வரலாற்றில் இடம் பிடிப்பார் என்கிறார்கள்.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.