பக்தி மணம் கமழும் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் வேளாண்குடி மக்கள்தான் பெரிதும் உள்ளனர். இந்தத் மக்களவை தொகுதிக்குள் கலசபாக்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு, வன்னியர்களும், அதற்கடுத்த எண்ணிக்கையில் பட்டியலினத்தவர், முதலியார் சமூகத்தினரும், கணிசமாக யாதவர்களும் பழங்குடிச் சமூக மக்ககளும் வசிக்கிறார்கள்.

திமுகவில் சிட்டிங் எம்பியான சி.என்.அண்ணாதுரை, அதிமுகவில் எம்.கலியபெருமாள், பாஜகவில் ஏ.அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சியில் ரமேஷ்பாபு ஆகியோர் திருவண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் எம்.கலியபெருமாள், முன்னாள் அமைச்சருமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ஆதரவாளர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 1989-ல் இருந்து கட்சி உறுப்பினராக உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில், தேர்தலில் போட்டியிட கட்சியினரிடையே இருந்த போட்டியை, இத்தேர்தலில் காணமுடியவில்லை. நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன், விருப்ப மனு தாக்கல் செய்யாதது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

எனினும், முன்னாள் அமைச்சர்கள் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி (இருவரும் மாவட்டச் செயலாளர்கள்) இணைந்து பணியாற்றினால் கோடைகால வெயிலிலும் இரட்டை இலை மலரும் என்ற நம்பிக்கையுடன் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்கின்றனர்.

பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் பாட்டாளி மக்கள் கட்சியில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்தாா். 2012-ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமன், திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு என்ன செய்யப்போகிறார் என்கிறார்கள்?

சிட்டிங் எம்பியும் திமுக வேட்பாளருமான சி.என்.அண்ணாதுரைக்கும் தி.மு.க-வுக்கும் மூன்று தலைமுறை பந்தம் இருக்கிறது. அண்ணாதுரையின் தாத்தா சின்னசாமி, பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்டவர். தாத்தாவைத் தொடர்ந்து, அண்ணாதுரையின் அப்பா நடராஜனும் தி.மு.க-வில் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். பேரறிஞர் மீதான ஈர்ப்பினால்தான் இவருக்கும் அவர் பெயரையே சூட்டினார்கள்.

அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர விசுவாசி. சிட்டிங் எம்பியாக இருந்தபோது தொகுதிக்கு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தொலைத்தொடர்பு இல்லாத இடங்களில்  98 பி.எஸ்.என்.எல் டவர்களை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்று, முதற்கட்டமாக ஜவ்வாதுமலை, புதூர்நாடு மலைக் கிராமங்களில் 33 டவர்களை நிறுவுவதற்கான வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரயில் பாதை திட்டம், கிடப்பில் போடப்பட்ட சில திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். போன் செய்தால் அவரே பேசுவார். பகட்டு இல்லாத மனிதர். தொகுதிக்குள்ளும் நல்ல அறிமுகம் உண்டு என்றனர்.

அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் களத்தில் ஆட்சி பலம், அரசியல் பலம், பண பலம் என அனைத்திலும் வலிமையாக உள்ளார். அமைச்சர் ‘ஆசி’யில் போட்டியிட கூடிய வேட்பாளர்களை எதிர்ப்பது என்பது, எதிர் முகாமில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் இம்முறை அதிமுகவில் வேட்பாளர் போட்டியிலிருந்து பலர் நைசாக சேதாரமின்றி கழண்டு கொண்டனர் என்கிறார்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையாரின் அருள் சிட்டிங் எம்பியான அண்ணாத்துரைக்குத்தான் என்கிறார்கள்.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு சாதகமாகவேண்டுமானாலும் மாறாலம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

-ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.