தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்த சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய நிகழ்ச்சிக்கு ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இக்கோவிலில் சித்திரை தேரோட்டம், கந்த சஷ்டி திருவிழா, திருவாதிரை திருவிழா, கார்த்திகை திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆடித்த வசு மற்றும் கோவிலில் நடத்தப்படும் பல்வேறு திருவிழாக்கள் நன்கொடையாளர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேத்தை சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக அரசும், கோவில் அறங்காவலர் குழுவும் முழு வீச்சில் செயல்பட்டு வந்தனர். இந்த கும்பாபிஷேகத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமான நன்கொடையாளர்கள் பல லட்சக்கணக்கான ரூபாய் திருவிழாவிற்கு செலவு செய்து வருகிறார்கள்.
திருவிழாவிற்கு செலவு செய்யும் நன்கொடையாளர்களுக்கு கும்பாபிஷேகத்தை காண பாஸ் வழங்கப்படும் என்ற தகவல் நன்கொடையாளர்களுக்கு பரவியது. இதனை எடுத்து நேற்று இரவு 8மணி முதல் ஏராளமான நன்கொடையாளர்கள் கோவிலில் அமைந்துள்ள அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால் கோவில் அதிகாரிகள் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டும் பாஸ் வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு பாஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நன்கொடையாளர்கள் நேற்று இரவு எட்டு மணி முதல் காத்திருந்தனர். மேலும் கோவிலில் பல லட்சம் செலவு செய்து திருவிழாக்கள் நடத்தும் நன்கொடையாளர்களுக்கு பாஸ் வழங்காதது குறித்து பக்தர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் நன்கொடையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.