காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக இருப்பவர் கே.சி. வேணுகோபால். இவர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் இருக்கிறார். கடந்த 17 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக கோவை காங்கிரஸ் கமிட்டியினர் இரண்டு கோஷ்டிகளாக விமான நிலையம் சென்றிருந்தனர்.

தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஐஎன்டியூசி தலைவர் கோவை செல்வம் தரப்பில் ஒரு கோஷ்டியும் சென்றிருந்தார்கள். கோவை காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், மயூரா ஜெயக்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் கோவையில் காங்கிரஸ் கட்சி வளரும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்த மோதல் காங்கிரஸ் தலைமை வரை சென்றும் தீர்ந்தபாடில்லை. வேணுகோபாலை வரவேற்க சென்ற இடத்திலும் மோதல் வெடித்துள்ளது. இரண்டு தரப்பினரும் வேணுகோபாலிடம் மாறி மாறி புகார் தெரிவித்துள்ளனர். அவர் முன்பே இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் வேணுகோபால் இருவருக்கும் அறிவுரை சொல்லி கிளம்பிவிட்டார். அப்போது மயூரா ஜெயக்குமார் மற்றும் கோவை செல்வம் இடையே கடும் வார்த்தை மோதல் வெடித்தது. வாக்குவாதம் முற்றி, இரண்டு தரப்பிலும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்குவதற்கு முயற்சித்தனர்.

இதைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்து ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்து அனுப்பினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிலையில், கோவை செல்வம் மயூரா ஜெயக்குமார் மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கட்சி நிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய சூழலில் மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.