நடிகர் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் சினிமா படப்பிடிப்பு திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் ராமேகவுண்டன் புதூர் ஜமீன் வீட்டில் பல நாட்கள் நடைபெற்றது. அப்போது நான் ஈரோட்டிலிருந்து வெளியான தினமடல் நாளிதழில் நிருபராக பணியாற்றிய சமயம்.
நிருபர் என்ற முறையில் நானும் புகைப்பட கலைஞர் ஏசுதுரையும் பல நாட்கள் நடந்த படப்பிடிப்பில் செய்திகள் சேகரித்தோம். அப்போது மிகச்சிறிய வேடத்தில் நடித்தார் வடிவேல், அவருடன் பேட்டிக்காக பேசிக் கொண்டிருப்பேன். இதைப் பார்த்த விஜயகாந்த், என்னைப் பார்த்து சிறு கலைஞர்களை ஆதரியுங்கள் என்றும் வடிவேலைப் பார்த்து பேட்டி கொடு என்றார்.
படப்பிடிப்பு நடக்கும் போது , விஜயகாந்த் என்னைப் பார்த்து மக்களிடம் நல்ல விசயங்களை கொண்டு செல்லுங்கள் என அடிக்கடி கூறுவார்.. படப்பிடிப்பு நடந்த இடைநாளில், ஜமீன் வீட்டிற்கு வெளியே வயதான அம்மா ஒருவர் ,உள்ளே வர முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்த நான் என்ன என்று கேட்டபோது … என் மகளின் கல்விக்கு உதவித்தொகை விஜயகாந்திடம் கேட்க வந்தேன் என்றார்.நானும் இது குறித்து விஜயகாந்திடம் கூறினேன். அதற்கு அவர் சிறிது நேரம் கழித்து கூட்டி வாருங்கள் என்றார்.
இவருக்கான படப்பிடிப்பு இல்லாத நேரம் பார்த்து அந்த அம்மாவை கூட்டி வந்து நிறுத்தினேன்! அப்போது விஜயகாந்த விவரம் கேட்டபோது அந்த அம்மா , எனது மகள் சாவித்திரி உடுமலை தனியார் கல்லூரியில் படிக்கிறார் என்றும் படிப்பை தொடர பணம் கட்டமுடியவில்லை என்றும், நான் தலைச்சுமையில் காய்கறி வியாபாரம் செய்கிறேன் என்றும் கூறி நிதியுதவி கேட்டார்.விஜயகாந்த தனது உதவியாளரிடம் முழு விவரங்களை கேட்டு, எனக்கு கூறுங்கள் என்று சொல்லிவிட்டு, அந்த அம்மாவிடம் நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.
அந்த அம்மாவோ நம்பிக்கையற்று வெளியே சென்று விட்டார்.இருப்பினும் தனுது உதவியாளர் மூலம் சாவித்திரி என்ற அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து படிக்க தேவையான தொகையை கேட்டறிந்து கல்லூரி நிர்வாகத்துக்கு தொகையை செலுத்திவிட்டார். இதுகுறித்து விஜயகாந்திடம் கேட்டபோது ஆம் என்று மட்டும் கூறினார்.
நான் இது குறித்து மலையாளத்தில் புகழ்பெற்ற வார இதழான மங்களம் – தமிழில் வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் மங்களம் தமிழ் வார இதழில் நான் சாவித்திரிக்கு உதவிய விஜயகாந்த் என்ற தலைப்பில் கட்டுரையை எழுதினேன். அது பிரசுரமானது…
வெளியே தெரியாமல் உதவும் உள்ளம் விஜயகாந்த்-க்கு சொந்தமானது என்பதை நானே நேரில் கண்ட நிகழ்வு. இது போன்ற உதவிகள் எத்தனையோ செய்துள்ளார். இன்று இவர் இறந்திருக்காலாம், ஆனால் இவரின் உதவும் உள்ளம் உலகுள்ளவரை உயிர்வாழும் என்பது மட்டும் நிச்சயம்.
விஜயகாந்த் என்றும் இறவாப் புகழுடன் எல்லோரின் இதயத்திலும் வாழ்வார் என்பது தான் எதார்த்தம். மறைவுற்ற மாமனிதர் நடிகர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எமது விழிநீர் அஞ்சலி…
-கணியூர் பரூக், ஆசிரியர் மற்றும் நிறுவனர், சேனாதிபதி மாத இதழ்.