கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதி. இப்பகுதியில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களும், தமிழகத்திற்குட்பட்ட பல மாவட்டத் தொழிலாளர்களும் சூலூர் பகுதியில் தங்கி ஒன்றாக வேலை செய்து வருகின்றனர்.
மேலும் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு பிரதான சாலைகளாக கோவை – அவிநாசி நெடுஞ்சாலை, சேலம்-கொச்சின் எல் அண்ட் டி நெடுஞ்சாலை, கோவை-திருச்சி நெடுஞ்சாலை, செட்டிபாளையம்-நெடுஞ்சாலை ஆகியவைகள் உள்ளன. இவற்றையெல்லாம் இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள் பலவும் உள்ளது. இதனால் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும், மேற்படி சாலைகளில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை அடையாளம் காணவும் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்கள் அத்தியாவசியமாக உள்ளது.
கோவை மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஐபிஎஸ் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஒரு ஆண்டாக சாலைகளின் முக்கிய சந்திப்புகள், கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பொது நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்கள் மற்றும் காவல் நிலையத்தின் எல்லைகள் ஆகியவற்றில் தனியார் நிறுவனத்தின் CSR நிதி உதவி பெற்று 100 இடங்களில், சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் கேமராக்களை கண்காணிக்க ஒருங்கிணைந்த கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டது.
மேற்படி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை
இன்று (26.12.2023) மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி ஐபிஎஸ் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் கோவை சரக துணை தலைவர் சரவணசுந்தர் ஐபிஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேற்படி விழாவில் கேமராக்கள் பொருத்த உதவியாக இருந்த தனியார் நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-கே தமிழகம் சேட்.