திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகரப்பகுதிகளில் திமுகவினர் ஒட்டிய சுவரொட்டியில் திமுகவினரே “கருப்பு மை” அடித்துள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

SKM தங்கராஜ் (எ) SK.மெய்ஞானமூர்த்தி உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருகிறார். இவர் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், மறைவுற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்கு வாழ்த்து கூறி நகரப்பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

SKM தங்கராஜ் (எ) SK.மெய்ஞானமூர்த்தி

இந்த சுவரொட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி மற்றும் SKM தங்கராஜ் (எ) SK.மெய்ஞானமூர்த்தி ஆகியோர் படம் இடம் பெற்றிருந்தது. சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட அடுத்த தினமே SKM தங்கராஜ் (எ) SK.மெய்ஞானமூர்த்தி புகைப்படம் மற்றும் பெயர் மீது “கருப்பு மை” அடிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் நாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இல.பத்மநாபன்

இது குறித்து நாம் விசாரிக்கையில், கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒட்டிய சுவரொட்டியில் நகர செயலாளர் வேலுச்சாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதனால் தான் அவரின் ஆதரவாளர்கள் கருப்பு மை அடித்துள்ளனர். இதுபோலவே மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அன்று ஒட்டிய போஸ்டரிலும் கருப்பு மை அடிக்கப்பட்டது. போஸ்டர் விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்து, சிசிடிவி புட்டேஜ்களை ஆராய்ந்த போது, நகர திமுகவுக்கு தொடர்புடைய இரு இளைஞர்கள் தான் இருசக்கர வாகனத்தில் வந்து, இந்த செயலில் ஈடுபட்டனர் என்று கண்டறிந்தனர். இருப்பினும் இருதரப்புமே திமுகவினர் என்பதால் காவல்துறையும் கையைப் பிசைந்தது.

சி,வேலுச்சாமி

நகரப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டுவதால் கூடுதலாக மக்களின் கவனத்தை ஈர்க்க முடிகிறது என்பதால் ஒட்டப்படுகிறது.  உட்கட்சி விவகாரம் என்பதால் இதை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என்கிறது ஒரு தரப்பு? மற்றொரு தரப்போ நகரப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டும்போது ஒரு மரியாதைக்காகவாவது நகர செயலாளரின் புகைப்படம் போட வேண்டும். புகைப்படம் போட்டால் என்ன குறைந்து விடுவார்களா? கட்சியில் அவரும் ஒரு சீனியர் அதனால் அவரின் புகைப்படம் இடம்பெற வேண்டும். ஒன்றிய நிர்வாகி ஒன்றியப் பகுதிகளில் போஸ்டர் ஒட்டாமல் ஏன் நகரப்பகுதிகளில் வந்து போஸ்டர் ஒட்டுகிறார்கள்?  இனிவரும் காலங்களில் இந்த நிலை நீடிக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

உடுமலை சட்டமன்ற தொகுதியை திமுக கடைசியாக 1996 இல் வென்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக அதிமுக வசமே இருந்து வருகின்றது. கட்சிக்கு செலவு செய்பவர்கள் குன்றி வரும் காலகட்டத்தில் போஸ்டர் ஒட்டுவதற்கெல்லாம் வேஷ்டியை மடித்துக்கொண்டு கோஷ்டி அரசியல் செய்தால் எப்படி கட்சி வளரும்/உருப்படும்?

உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் போட்டியிட முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், கட்சியில் நிலவும் இதுபோல பிரச்சனைகளை துவக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் சிரமம் தான் என்கிறார்கள்.எனவே இதுகுறித்து மாவட்ட அமைச்சர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் தலையிட்டு போஸ்டர் பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே கடைநிலை திமுகவினரின் கோரிக்கையாக உள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் போதெல்லாம் கோஷ்டி பூசலுக்கு இடம் தரக்கூடாது, கோஷ்டி அரசியல் என்பது நமது கழகத்திற்கு நாமே வெட்டிக்கொள்ளும் சவக்குழி என்பார்! இதை நிர்வாகிகள் மனதில் வைத்தால் சரி..