கோவை மாநகர காவல்துறை ஆணையராகப் பணியாற்றி வரும் துடிப்புமிக்க வி.பாலகிருஷ்ணன் IPS காவல் பணியில் மிகவும் கண்டிப்பானவர். அதோடு, புத்தகம் எழுதுதல், மராத்தான், இன்னபிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை திறம்பட நடத்துதல் என பல்வேறு தளங்களில் படுபிசியாக இயங்கி வருகிறார். கடந்த 2022 அக்டோபர் மாதம் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக்காக “போலீஸ் அக்கா” திட்டத்தை கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தியுள்ளார். இத்திட்டம் கல்லூரி மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

போலீஸ் அக்கா திட்டம் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைக்கும் வி.பாலகிருஷ்ணன் IPS

போலீஸ் அக்கா திட்டம் என்பது என்ன?

கோவையில் சீருடை அணிந்த ஒரு பெண் காவலர், மாணவிகளைத் தேடிச் சென்று, அவர்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு காண்பதே போலீஸ் அக்கா திட்டம். ஒரு பெண் காவலருக்கு தலா இரண்டு கல்லூரிகளை கவனிக்கும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. புகார் வந்தால் கல்லூரிக்கு செல்லவும், புகார் இல்லாத நேரங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை கல்லூரிக்குச் செல்லவும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன. இவர்களின் பெயர், தொடர்பு எண்களுடன் கூடிய விபரங்களைக் கொண்ட ‘க்யூ ஆர்’ கோட், கல்லுாரிகளில் ஆங்காங்கே சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன.”கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 24 காவல் நிலையங்களைச் சேர்ந்த 37 பெண் காவலர்கள் 71 கல்லூரிகளில் பயிலும் 1,43,224 மாணவிகளுக்கு, ‘போலீஸ் அக்கா’வாக பணி செய்கின்றனர்”.

வி.பாலகிருஷ்ணன் IPS மற்றும் காவல்துறையினர்

‘போலீஸ் அக்கா’ இதுவரை என்ன செய்தார்?
சம்பவம்-1, 
”சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியர் சிலர், கோவையில் ஒரு தோழியின் ‘பாசிங் அவுட்’டுக்காக வந்து, ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அதில் ஒரு மாணவி, தான் குளிக்கும்போது, யாரோ படமெடுத்தது போலத் தெரிந்ததாக ஒரு கல்லூரித் தோழியிடம் சொல்லியிருக்கிறார். அவர் ‘போலீஸ் அக்கா’விடம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னார். உடனே நாங்கள் அந்த விடுதிக்குச் சென்று, அந்த மாணவி தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் தங்கியிருந்த 27 வயது ஐ.டி., ஊழியர் ஒருவரை விசாரித்தோம். அவர் எங்களிடம், ‘அப்படி யாராவது வீடியோ எடுத்திருந்தால் கண்டுபிடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம் என்று மிகவும் ஆவேசமாகப் பேசினார்.அந்த பெண், தன்னைப் படமெடுத்த அந்த போன், சிகப்பு நிற ஐபோன் போல இருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த இளைஞரிடம் சிமென்ட் நிறத்தில் வேறு ஒரு நிறுவனத்தின் போன் இருந்தது. நாங்கள் அவரிடம் அவருடைய அம்மாவின் போன் நம்பரை வாங்கினோம். அவருடைய அம்மாவிடம், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு போன் கிடப்பதாகச் சொல்லி, உங்கள் மகன் பயன்படுத்தும் போன் என்ன, நம்பர் என்ன என்று கேட்டோம். அவர் ‘சிகப்பு நிற ஐபோன்’ என்று சொல்லி விட்டார்.அதன்பின் விசாரித்த போது, அந்த போனை காந்திபுரத்தில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் மூலமாக சென்னையிலுள்ள தன் வீட்டிற்கு அந்த இளைஞர் அனுப்பியிருப்பது தெரியவந்தது. அதில் அனுப்புநர் விலாசத்தை போலியாகக் கொடுத்து, பெறுநராக தனது அண்ணனின் பெயருக்கு முகவரி எழுதி அனுப்பியுள்ளார். எதிலும் அந்த இளைஞரின் பெயர் இல்லை.இரவு எட்டு மணிக்கு பார்சல் சர்வீஸ் அலுவலகத்திலிருந்து அந்த பார்சலைக் கைப்பற்றி, கொண்டு வந்து அதைப் பிரித்தபோது, அந்த சிகப்பு நிற ஐபோன் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றது தெரியவந்தது. அந்தப் பெண் கேட்டுக் கொண்டதால், வெறும் சிஎஸ்ஆர்(தினசரி நிகழ்வு குறித்து காவல் நிலைய பதிவு) போட்டு, போனில் உள்ளவற்றை அழித்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

போலீஸ் அக்கா திட்டம்

சம்பவம்-2,
கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமின்றி, பிற பெண்களும் இந்த திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. அம்மா திடீரென இறந்து விட்டார். அப்பா பால் வியாபாரி. அவர் தன் மனைவியின் அக்கா அதாவது குழந்தைகளின் பெரியம்மா வீட்டில் இரண்டு மகள்களையும் கொண்டு போய் விட்டு விட்டார். அவர்கள் இருவருக்கும் சாப்பாடு கூட போடாமல், பல விதங்களிலும் துன்புறுத்தியுள்ளனர். அதை அப்பாவிடம் சொன்னால் அவர் புரிந்து கொள்ளவில்லை. அதில் பெரிய மகள், கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இரண்டாவது பெண், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுமி. கல்லுாரியில் படிக்கும் அந்த மாணவி வந்து எங்களிடம் தனக்கும், தன் தங்கைக்கும் பெரியம்மா வீட்டில் நடக்கின்ற கொடுமைகளைப் பற்றி கண்ணீரோடு தெரிவித்தார். நாங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துப் பேசினோம். அவர்கள் எங்களையே மிரட்டுகிற தொனியில் பேசினார்கள். அதன்பின், சட்டம், வழக்கு என்று சொன்னதும், பின் வாங்கி விட்டார்கள். இரு தரப்பையும் பேசி சமாதானத்துடன் செல்லுமாறு அனுப்பி வைத்தோம். அந்தக் குழந்தைகள் இப்போது அவளுடைய தந்தையுடன் இருக்கிறார்கள். அந்த கல்லுாரி மாணவியே சமைத்துக் கொண்டு தன் தங்கையையும் பார்த்துக் கொள்கிறாள். சந்தோஷமாக இருக்கிறார்கள்!’’

போலீஸ் அக்கா திட்டம்

சம்பவம்-3,
போலீஸ் அக்கா திட்டத்தால் தனது பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததாக கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், “நான் டிகிரி படித்துக் கொண்டிருந்த போதே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. டிகிரி முடித்ததும் திருமணம் செய்ய தீர்மானிக்கப் பட்டிருந்தது. இந்த கால இடைவெளியில் எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என் மீது சந்தேகப்பட்டார். இப்போதே சந்தேகம் கொள்பவருடன் இணைந்து வாழ்வது சரியாக இருக்காது என்று முடிவு செய்தேன். இதுகுறித்து வீட்டில் பேச பயமாக இருந்ததால் போலீஸ் அக்கா ஒருவரிடம் தெரிவித்தேன். அவர் என் பெற்றோரை அழைத்துப் பேசி எனது முடிவை அவர்கள் ஏற்க செய்தார்” என்றார்.

போலீஸ் அக்கா திட்டம்

போலீஸ் அக்கா திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெற்றுள்ளனர்?
போலீஸ் அக்கா திட்டத்தில் இதுவரை 493 அழைப்புகள், மாணவிகளிடமிருந்து வந்திருக்கின்றன. அவை சார்ந்து, எட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பலரையும் கைது செய்திருக்கிறோம். ஒரு போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட புகார்களில் ‘சிஎஸ்ஆர்’ பதிவு செய்திருக்கிறோம். ஏராளமான புகார்களில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது.

போலீஸ் அக்கா திட்டத்தின் சிறப்புகள் என்ன?
மாணவிகளுக்கு போலீஸ் அக்காக்கள் உதவுவதைப் பார்த்து, மாணவர்களும் ‘அக்கா’ எங்களுக்கும் உதவுங்கள் என்று கேட்டு வருகின்றனர். அவர்களில் பலர் சைபர் மோசடியில் ஏமாற்றப்பட்டவர்களாக உள்ளனர். அவர்களுடைய பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதோடு, தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்கள்.’’ இதில் பணியாற்றும் பெண் காவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டாலும், அவர்கள் ஏற்கனவே பார்த்து வந்த கல்லூரிகளுக்கு மட்டும் இவர்களே போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்ற வேண்டுமென்ற சிறப்பு உத்தரவை பாலகிருஷ்ணன் IPS பிறப்பித்திருக்கிறார்.

சட்டம்–ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம்

தமிழ்நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த போலீஸ் அக்கா திட்டம்.
போலீஸ் அக்கா திட்டத்தை, தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து, கோவை மாநகர காவல் ஆணையரிடம் முன்மொழிவு கேட்டிருப்பதாக தமிழக காவல் துறை சட்டம்–ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். அதற்கான முன்மொழிவைத் தயார் செய்து, அனுப்பி விட்டதாக பாலகிருஷ்ணன் IPS, கூறியுள்ளார். இதையடுத்து இந்தத் திட்டத்தை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், கோவை மாநகர காவல்துறை வட்டாரமே மகிழ்ச்சியிலும், புது உத்வேகத்திலும் உள்ளது என்கின்றனர்.

வி.பாலகிருஷ்ணன் IPS

கல்லூரி மாணவிகளால் எங்குமே சொல்ல முடியாத பல பிரச்னைகளையும் ஒரு சொந்த சகோதரியிடம் சொல்லுவதைப் போன்று அச்சமின்றிச் சொல்வதற்கான ஒரு சூழலை இந்த ‘போலீஸ் அக்கா’திட்டம் ஏற்படுத்திக்கொடுத்தும், பெண்கள் பாதுகாப்புக்கென்று நாட்டிற்கே முன்னுதாரணமாக ஒரு சிறப்பான திட்டத்தைக் கொடுத்த வி.பாலகிருஷ்ணன் IPSக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

“பெண்கள் நம் கண்கள்” என்பதை தனது போலீஸ் அக்கா திட்டத்தின் மூலமாக மெய்ப்பித்து வருகிறார் வி.பாலகிருஷ்ணன் IPS..

-அ.முக்தார்.

வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் 2011-2012 –இல் திருப்பூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய போது, திருட்டு விசிடியை முற்றிலுமாக ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த விசயத்தில் அரசியல் தலையீடுகள் அதிக அழுத்தம் கொடுத்தும், சமசரசமின்றி தனது நடவடிக்கையை தொடர்ந்தார்.

2011-2012 திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யாகப் பணியாற்றிய போது நொய்யல் ஆற்றில் திடீரெனப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றோரம் ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் இருந்தன. அந்த மக்கள் எல்லாம் இந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி. மின்சாரம் எல்லாம் துண்டித்துவிட்டு, பாலகிருஷ்ணன் IPS எஸ்.பி தனது அதிரடிப் படையுடன் தண்ணீரில் இறங்கி மீட்புப் பணியை ஆரம்பித்தார்.  என்ன நடக்குமோ என்கிற ஓர் அச்சம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், காலைக்குள் 400-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். பாலகிருஷ்ணன் IPS -ன் இந்த துரிதப்பணியை அப்பகுதி மக்கள் மனதார பாராட்டினார்கள்.