கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் மீது கொடுத்துள்ள புகார் நாட்டையே உலுக்கியது. எம்எல்ஏ கருணாநிதியின் மகனும், மருமகளும் வீட்டு வேலைகளை செய்வதற்கென்று, கொத்தடிமை போல தன்னை அழைத்துச் சென்று சித்ரவதை செய்த கொடூரத்தை அந்த மாணவி விவரித்த காட்சிகள் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்ரவதைக்குள்ளான பெண் உடம்பில் ஏற்பட்ட காயங்கள்

இதையடுத்து, ‘பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்திருப்பதை கண்டித்தும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன்படி, திருப்பூர் புறநகர் கிழக்கு அதிமுக மாவட்ட கழகம் சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து இன்று (பிப்-01) மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொமரலிங்கம் பேருந்து நிறுத்தம் அருகில் திருப்பூர் புறநகர் கிழக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டிப்பதாகவும், பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.