அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் தொண்டர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை செங்கோட்டையன் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது எடப்பாடி அணியில் இருக்கும் பல சீனியர்கள் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், சசிகலாவை தலைமை ஏற்க அழைக்க இருப்பதாகவும் வெளியாகி உள்ள தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் அரசியல் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை எந்தவித சிக்கலும் இன்றி எதிர்கொள்ளலாம் என நினைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் கட்சியை விட்டுச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தனக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். அதிமுக கலகம் மேலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் போது பல அதிமுக சீனியர்களும் முன்னாள் அமைச்சர்களும் அவமதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மதுரையில் செல்லூர் ராஜுவை தனது வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி ஏற்றவில்லை என்ற தகவல் மதுரை அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

டிடிவி, சசிகலா, ஓபிஎஸ்

தனது எதிர்ப்பினை பதிவு செய்யும் விதமாக திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு மிகத் தாமதமாக வந்தார் செல்லூர் ராஜு. செங்கோட்டையன் இதற்கிடையே அதிமுகவில் மிக மூத்தவரும் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியுமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் பேட்டி அளித்த நிலையில் கட்சிப் பதவிகளைப் பறித்திருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில் நேற்று எடப்பாடியை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரண்டு மணி நேரம் காக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதனை மறுத்திருக்கிறது அந்த முன்னாள் அமைச்சர் தரப்பு. மேலும் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஜெயக்குமார்.தங்கமணி, சி.வி.சண்முகம்

அதே நேரத்தில் உள்ளுக்குள் மனக்கசப்பு இருப்பது உண்மைதான் என்றும் சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் செங்கோட்டையன் விவகாரத்தில் சில முன்னாள் அமைச்சர்கள் குறிப்பாக தங்கமணி, சிவி சண்முகம், அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைதி காப்பதையும் கவனிக்க வேண்டும். பாஜக கூட்டணி வேண்டும் என்று சில முன்னாள் அமைச்சர்களும், பாஜக கூட்டணி வேண்டாம் என சில முன்னாள் அமைச்சர்களும், குறிப்பிட்டவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என சில முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடிக்கு பிரஷர் கொடுத்து வருகின்றனர். மேலும் செங்கோட்டையனை நீக்கியதால் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு சற்றே சரிந்துள்ளது உண்மைதான். இது ஒருபுறம் இருக்க செங்கோட்டையனுடன் எடப்பாடி அதிருப்தி கோஷ்டியினர் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மூத்த தலைவர்கள் அதிருப்தி இதை அடுத்துதான் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார் செங்கோட்டையன் என்கின்றனர். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சி செய்யுங்கள். நாங்கள் ஆதரவளிக்கிறோம்.தேவைப்பட்டால் நாங்களே வெளியே வருவோம் என உறுதி அளித்தார்களாம். இதனால் உற்சாகமடைந்திருக்கும் சசிகலா தரப்பு செங்கோட்டையனை டெல்லிக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்பதால் நாங்கள் தலையிடவில்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தாலும், ‘முன்னாள் தலைவர்’ ஒருவரின் செயல்பாடுகளே அதிமுகவில் இந்த பிரச்னைக்கு காரணம் என்கின்றனர்.

பாஜகவுக்கு ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர்களை விட இபிஎஸ் தான் முக்கியம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், எடப்பாடி இன்னும் கொஞ்சம் தன் சொல்படி நடக்கவேண்டும் என்பது தான் செங்கோட்யைனின் கலகத்திற்கு காரணம் என்கிறார்கள்..