“பாஜகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன். இனியும் அந்த தவறை செய்யமாட்டேன்” இனி அவர்களுடன் ஒருபோதும் “ஒட்டும் இல்லை உறவும் இல்லை” என கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின்போது கூறினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுகவினர் ஜெயலலிதா இருக்கும் இடத்தை கோயில் என்பார்கள், அவரை தெய்வம் என்பார்கள். இப்படி இருக்க, ெஜ மறைவிற்கு பின், ஜெ வெறுத்த பாஜகவுடன் அதிமுக எப்படி மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டது அதிமுக? 1998ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை அதிமுக-பாஜக கூட்டணியில் நடந்தவைகளை பார்க்கலாம்.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் பிள்ளையார் சுழி போட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். அவர் தான் முதன் முறையாக, அதிமுக கூட்டணியில் போட்டியிட பாஜகவுக்கு 1998ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு அளித்தார். அதிமுக கூட்டணியில் பாஜக 5 இடங்களில் போட்டியிட்டது. அவற்றில் 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. நீலகிரியில் போட்டியிட்ட மாஸ்டர் மதன், கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சியில் போட்டியிட்ட ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் வெற்றி பெற்று பாஜக எம்.பிக்களாக லோக்சபாவிற்கு சென்றனர்.
அதிமுக-பாஜக உறவில் வாஜ்பாய்-ஜெவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. 1999ஆம் ஆண்டு பாஜக கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றார் ஜெயலலிதா. இதன் மூலம் அப்போதைய பிரதமரான வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி 13 மாதங்களில் முடிவுக்கு வந்தது. ஆட்சி கவிழ்ந்தது! பாஜக உடன் திமுக இணைய அதுவே காரணமாகி விட்டது.
இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி உருவானது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால், அவை அனைத்திலும் பாஜக தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் படு தோல்வியைத் தழுவியது.
2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக-தேமுதிக கூட்டணி இணைந்தது புதிய அணியை உருவாக்கி தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்தன. இவற்றில் 7 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார். கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து களம் கண்டது. “பாஜகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன். இனியும் அந்த தவறை செய்யமாட்டேன்” என வெளிப்படையாக அறிவித்து ஜெயலலிதா தேர்தலை எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் “மோடியா… லேடியா..” என்று கூறி பாஜகவிற்கு எதிராகவே பிரச்சாரம் செய்து அதில் வெற்றியும் பெற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேர்தலில் பாஜக 188 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, ஓபிஎஸ் முதல்வரானர். சசிகலா அன்கோவின் ெநருக்கடியால் ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு தர்மயுத்தம் நடத்தினார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது, இபிஎஸ்-க்கு முதல்வர் வாய்ப்பு, கட்சியைப் கைப்பற்ற எடுத்த தினகரன் மூவ் என பல ரகளைகள் அரங்கேறியது அதிமுகவில். ெஜ உயிருடன் இருந்தபோது இராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கட்சி, எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் போனது.
ஓபிஎஸ், தினகரன், உட்கட்சி பிரச்சனைகள் மற்றும் திமுக என பல்வேறு தரப்பிலிருந்து வரும் எதிர்ப்புக்களை சமாளிக்கவும், ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும் இபிஎஸ் பாஜகவிடம் சரணகதி அடைந்தார். அதிமுக உடன் பாஜக தலைவர்கள் உடனான நெருக்கம் அதிகரித்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது, அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 5 இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளித்தது. அப்போது மாநிலத்தில் தன்னைக் காத்துக்கொண்டு மத்தியில் கோட்டைவிட்டது அதிமுக.
2019 லோக்சபா தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணி தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை என்றே பேசப்பட்டது. தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் தேனி தொகுதியை தவிர மீதம் உள்ள 39 தொகுதியையும் திமுக – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது. 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த 20 இடங்களில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நாகர்கோவில், நெல்லை ஆகிய தொகுதிகளை கைப்பற்றி, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தது பாஜக.
அதே நேரத்தில் ஆட்சியை இழந்த அதிமுக எதிர்கட்சித்தலைவர் வரிசையில் அமர்ந்தது. அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரானதை அடுத்து பாஜகவின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விவசாய பணியில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக உடனான தொகுதி பங்கீடு இழுபறியானதால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டது பாஜக. அந்த தேர்தலில் மாநகராட்சி வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 308 இடங்களில் வென்றது பாஜக.
அதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது பாஜக. அப்போதே எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க அண்ணாமலை சமரச முயற்சி மேற்கொண்டார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை திரும்ப பெற்றது. அண்ணாமலை தலைமையின் கீழ் அதிருப்தியடைந்த பாஜகவினர் சிலரை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டது. இது பாஜக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்த, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராடினர். அப்போது எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டது மோதலை உருவாக்கியது.
எனினும் கூட்டணி தொடர்ந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுகவில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், சென்னையில் நடந்த கூட்டத்தில் அண்ணா குறித்து பேசியதுடன், கண்டனம் தெரிவித்த அதிமுக தலைவர்களுக்கு எதிராக காட்டமாக பேசியிருந்தார். இதுதான் அதிமுக பாஜக கூட்டணி இடையேயான முறிவுக்கு காரணமாக பேசப்படுகிறது.
“பாஜக மேலிடம் கூறித்தான் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் விமர்சனத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்றவே முடியாது. தேர்தலில் பாஜக தனியாக நின்றால் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெறும்” என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அதிமுகவின் நிர்வாகிகள். இதெல்லாம் நாடகம் என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் கூறி வந்தனர். எதுவுமே சொல்லாமல் அமைதி காத்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில்தான் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 25.09.2023 ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதையடுத்து பல அரசியல் கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இத்தனை நாட்கள் அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்து அரசியல் லாபம் தேடி இனி பயனில்லை என்பதையும், இனியும் அண்ணாமலையிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்றும் அறிந்து கொண்டார்! எடப்பாடி பழனிச்சாமி அதிமுக-வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றும் இதுபோன்ற முடிவுகளை எடுக்காவிடில் அது அப்பதவிக்கே பொருத்தமில்லாமல் இருக்கும். கூட்டணிகளைப் பற்றி கவலைப்படாமல் தமிழக வாக்காளர்களையும், தொண்டர்களையும் மட்டுமே நம்பி நின்று வெற்றிபெற்றவர் ஜெ. இன்று சட்டமன்றத்தில் அதிமுக எதிர்கட்சியாக அமர்ந்திருக்கும் ஒன்றே போதுமே எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பேட்டியிட்டால் நாற்பதும் நாமம் தான் என மாவட்ட செயலாளர்கள் குமுறியிருக்கிறார்கள். மத்தியில், மாநிலத்தில் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என தெளிவான பார்வை தமிழக வாக்காளர்களிடம் இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி இல்லாவிடில் திமுக இந்தப் பெரும்பான்மையை விட இன்னும் குறைவாக பெற்றிருக்கும். கூட்டணியின் பலம் என்பது வாக்குவங்கியை அதிகரித்தான். ஆனால், அதிமுக-பாஜக கூட்டணியை வாக்காளர்கள் ரசிக்கவில்லை. குறிப்பாக சிறுபான்மையினர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும், நடுநிலையாளர்களும் இக்கூட்டணியை அறவே விரும்பவில்லை.
இசுலாமியர்களை பொறுத்தவரையில் அஇஅதிமுக சிஏஏ சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது மிகப்பெரிய துரோகம் என்கிறார்கள். அதேவேளையில் திமுக ஆட்சிக்காலத்தின்போது கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது அனைத்து இசுலாமியர்களின் வீட்டிலும் சல்லடை போட்டது தமிழக காவல்துறை. மதம் என்ற ஒற்றை அடையாளத்துக்காக அனைவருமே குற்றவாளி ஆகிவிடுவோமா என்ன என்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றார். ஆனால் ஜெ மறைவுக்குப்பின் அவர்களுடனேயே அதிமுக கூட்டணி வைத்து, ஜெ மறுத்த சில திட்டங்களையும் செயல்படுத்தியது அஇஅதிமுக.
கூட்டணி முறிவு திமுகவிற்கு நிச்சயமாக கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டோடு உள்ளது. மத்திய அரசு எதிர்பென்ற கவர்ச்சி அரசியலையும் மக்கள் வெகுவாக ரசிக்கின்றனர். INDIA கூட்டணியின் முக்கிய அங்கமாகவும் உள்ளது. 40 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட ஜாம்பவான் மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது. இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப்பார்த்து மத்தியில் பெரும் கனவைக் கொண்டுள்ளது திமுக. திமுக எளிதாக வென்று விடலாம் என்ற நிலை சற்றே மாறும்.
ஆக அரசியல்வாதிகளின் பாராளுமன்ற இலாபக்கணக்காட்டம் துவக்கிவிட்டது!
-சேனா