கொங்கு பகுதியான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை மார்ச்-25 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்யவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதால், அதிமுக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் பவர் சென்டருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று மார்ச்-23 ஆம் தேதி கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பொள்ளாச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன், நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரை அறிமுகப்படுத்தினர். இந்த அறிமுக கூட்டம் கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதே நமது இலக்காக இருக்கவேண்டும் என எஸ்.பி.வேலுமணி பேசினார். மேலும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் பேசுகையில் அதிமுகவின் நலத்திட்டங்கள் குறித்து பேசியதோடு, பொள்ளாச்சி மக்களவை தொகுதி வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து பொள்ளாச்சி தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். அதற்காக தொண்டர்கள் அனைவரும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும் என்று எழுச்சியுடன் பேசினார்.
முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி தொகுதிக்குள் தேர்தல் பணியில் களமிறங்க உள்ளதால் அக்னி வெயிலில் அதிமுகவின் பணி இனி அனல் பறக்கும் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்..