நடிகர் அல்லு அர்ஜுனை இன்று அவரது வீட்டில் நுழைந்து போலீசார் திடீரென்று கைது செய்துள்ளனர். ‛புஷ்பா 2’ திரைப்படத்தை அல்லு அர்ஜுன் பார்க்க சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்த வழக்கில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இந்த திரைப்படத்தின் 2ம் பாடம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2 நாட்களுக்கு முன்பே இந்த திரைப்படம் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. தொடர்ந்து திரையரங்கில் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. முன்னதாக ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சி திரைப்படம் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது. இந்த காட்சியை நடிகர் அல்லு அர்ஜுன் பார்க்க சென்றார். அப்போது அவரை பார்க்க ஏராளமானவர்கள் கூடினர். ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு அல்லு அர்ஜுனை பார்க்க முயன்றனர். இதனால் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் 35 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண் இறந்தார். ரேவதியின் மகன் உள்பட மேலும் சிலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் தான் நடிகர் அல்லு அர்ஜுனை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அல்லு அர்ஜுனின் வீட்டுக்குள் நுழைந்து போலீசார் கைது செய்தனர். சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்த வழக்கில் சிக்கடபள்ளி போலீசார் அல்லு அர்ஜுனை கைது செய்துள்ளனர்.

அல்லு அர்ஜூனை மருத்துவ பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் நபர்கள் பொதுவாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையிலேயே அவரை அழைத்து சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனை முடிந்த உடன் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் ஆஜர் செய்யப்படுவார். அவரது ஜாமீன் மனு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. ஜாமீனை நீதிமன்றம் நிராகரிக்கும் பட்சத்தில், அவர் ரிமாண்ட் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. பெயில் கிடைக்குமா இல்லை என்பது விரைவில் தெரியவரும்.

அல்லு அர்ஜுன் கைது சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.