திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, 45-வது வார்டு, செல்லயாண்டியம்மன்துறை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 3 தளங்களில் 240 குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவேண்டுமென அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த க.செல்வராஜிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனடிப்படையில் கடந்த 22.11.2023 அன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு குடிநீர் இணைப்பு வழங்கிட மாநகராட்சி ஆணையரிடம் பரிந்துரைக்குமாறு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ க.செல்வராஜ் கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட 240 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்திற்கு குடிநீர் தேவைக்காக 1,12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள 240 குடியிருப்புகளுக்கு உத்தேசமாக 1,29,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டால் மட்டுமே தினமும் குடிநீர் வழங்க இயலும், எனவே குறைபாடாக உள்ள சுமார் லிட்டர் கொள்ளளவிற்கான கட்டுமானத்தையும் 240 குடியிருப்புக்கான குடிநீர் குழாய் இணைப்பிற்கான வசதியினையும் அமைக்குமாறு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு நிறுவன செயற்பொறியாளருக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

அதோடு, மேற்குறிப்பிட்ட கூடுதல் கட்டுமானங்கள் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்ட பின் 240 குடியிருப்புதாரர்கள் தங்களது குடியிருப்புக்கான சொத்துவரி நிலுவை தொகையுடன் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் உபவிதிகளின்படி குடிநீர் இணைப்பு தொகை செலுத்தும் பட்சத்தில் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ க.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் ஐஏஎஸ் மற்றும் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ஐஏஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என எம்எல்ஏ க.செல்வராஜிடம் உறுதி கூறினர்.