திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மைவாடி ஊராட்சி உடுமலைப்பேட்டை வட்டம், பெரியகோட்டை ஊராட்சி என இரண்டு ஊராட்சிகளின் எல்லைப்பகுதியான பெரியகோட்டை பிரிவு சாந்தி பள்ளி அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த மாருதி சிஃப்ட் காரும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்துக்குள்ளான கார்

இந்த இடத்தில் இதோடு சேர்த்து சுமார் 20 முறைக்கு மேல் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது; இந்த சாலை மைவாடி-பெரியகோட்டை என இரு ஊராட்சிகளின் இணைப்புச் சாலையாக இருக்கிறது. விபத்து ஏற்பட்ட ராஜாவூர் பிரிவில் இருந்து பைபாஸ் சாலை உயரம் அதிகமாக உள்ளது. இதனால் பைபாஸ் சாலையில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. பாதுகாப்பு தடுப்புகள், வேகத்தடைகள் என ஏதும் இல்லாமல் இருப்பதால்தான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த பள்ளமான சாலையை உயரப்படுத்த வேண்டும். பாதுகாப்பு தடுப்புகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நாங்கள் பலமுறை முன்வைத்துள்ளோம் ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எவற்றையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பொதுமக்கள் சாலை மறியலில் செய்வதையறிந்த, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈஸ்வரசாமி, காவல்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை தனது தூக்கத்தை களைந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளுமா?