புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நம் நாட்டின் விமானப்படை வீரர் அபிநந்தனை பிடித்த பாகிஸ்தானின் ராணுவ அதிகாரியான மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா கொல்லப்பட்டுள்ளார். தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பினரை சேர்ந்தவர்களுடன் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் நுழைந்து 26 சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதற்கு நம் நாடு உரிய பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமான தளங்களை நம் வீரர்கள் அழித்தனர்.

இப்போது பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது நம் நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் வாய்ச்சவடால் விடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. இருநாடுகளின் எல்லையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினருக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கைபர் பக்துன்வா பிராந்தியத்தில் டிடிபி மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாகிஸ்தானின் ராணுவத்தில் மேஜராக பொறுப்பு வகித்து வந்த மொய்ஸ் அப்பாஸ் ஷா கொல்லப்பட்டுள்ளார். இவர் யார் என்றால் நம் நாட்டின் விமானப்படையை சேர்ந்த வீரரான அபிநந்தன் வர்த்தமானை சிறை பிடித்தவர்.

கடந்த 2019 ம் ஆண்டில் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத பயிற்சி மையம் மீது குண்டு வீசியது. நம் விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அடித்தது. அப்போது நம் நாட்டின் விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இருப்பினும் அவர் பயணித்த மிக்-21 போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து விமானத்தில் இருந்து உயிர் தப்ப அபிநந்தன் வெளியேறினார். அவர் நம் நாட்டின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்த நாட்டின் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.

இருப்பினும் அவரை மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலமாக மீட்டது. பாகிஸ்தான் அபிநந்தனை அட்டாரி – வாகா எல்லை வழியாக நம்மிடம் ஒப்படைத்தது. அபிநந்தனின் துணிச்சலான செயலுக்காக அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. முன்னதாக பாகிஸ்தானில் அபிநந்தன் வர்த்தமானை சிறை பிடித்தது இந்த மொய்ஸ் அப்பாஸ் ஷா தான். இப்போது டிடிபி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.