தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவகங்கள் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் அதிகரித்திருப்பது மட்டும் அல்லாமல் பல இடங்களில் பல நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டு உணவுகளை விரும்பும் வெளிநாட்டு மக்களையும் இது பெரிய அளவில் கவர்ந்துள்ளது.ஆனால் நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவகங்கள் எண்ணிக்கை சற்று குறைவு தான், அதில் முக்கியமான ஒன்று அடையார் ஆனந்த பவன் (A2B). இந்த நிலையில் அடையார் ஆனந்த பவன் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் (PE) பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டும் பணியில் இறங்கியுள்ளது.

இந்திய உணவகங்கள், உணவுப் பொருட்கள் நிறுவனங்கள் மீது தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களுக்குச் சமீபத்தில் கவனம் திரும்பியுள்ளது. இதைப் பயன்படுத்தி அடையார் ஆனந்த பவன் சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்யும் ஸ்ரீனிவாச ராஜா குடும்பம் தங்களது கையிருப்பில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து 1000 முதல் 1200 கோடி ரூபாய் வரையில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்காக தங்கள் கையிருப்பில் இருக்கும் பங்குகளில் 35% வரை விற்பனை செய்ய அடையார் ஆனந்த பவன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு 3500 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அடையார் ஆனந்த பவன் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் 3 வெளிநாடுகளிலும் இயங்கி வரும் அடையார் ஆனந்த பவன் தரமான தென்னிந்திய உணவுகளுக்குப் பெயர் பெற்றது. தற்போது ஸ்ரீனிவாச ராஜா குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் இந்த நிறுவனத்தை மேலும் தொழில் முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஐபிஓ நோக்கி அடையார் ஆனந்த பவன் பயணிக்கத் துவங்கியுள்ளது.

அடையார் ஆனந்த பவனின் இந்த நிதி திரட்டும் பணியில் வேதா கார்ப்பரேட் அட்வைடர்ஸ் (Veda Corporate Advisors) A2B-க்கு ஆலோசனை வழங்கவுள்ளதாகவும், இந்த நிதி திரட்டல் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிக் கம்பெனிகளுடன் இணைந்து செயல்படவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட A2B நிறுவனம் தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 150 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் 10 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடையார் ஆனந்த பவன் IPO வெளியிடத் திட்டமிட்டு இருக்கும் வேளையில் இந்த தனியார் பங்கு முதலீட்டுத் திட்டம் வெளியாகியுள்ளது. ஐபிஓ வெளியிடுவதற்கு முன்பு இந்தியாவில் 400 முதல் 500 கிளைகளைத் திறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2024 நிதியாண்டில் A2B நிறுவனத்தின் மொத்த வருவாய் 1500 கோடி ரூபாயாக ஆக இருக்கும் என்றும், லாபம் 100 கோடி ரூபாய் அளவில் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது. A2B நிறுவனம் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்திடம் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட முயற்சிப்பது இது இரண்டாவது தடவை. 2016 ஆம் ஆண்டில் சமாரா கேப்பிட்டல், வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல், கார்லைல் மற்றும் கேகேஆர் போன்ற தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் நிதி திரட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இந்த முயற்சி அப்போது தோல்வியில் முடிந்தது, அந்த சமயத்தில் A2Bநிறுவனத்தின் மதிப்பு 1800 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது, 8 வருடத்திற்குப் பின்பு இதன் மதிப்பு 3,500 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

ஆக தனது அடையார் ஆனந்த பவன் வியாபாரத்தை விரிவுபடுத்த துரிதமாக இறங்கியுள்ளது.