கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு செல்ல தயாராக இருந்த தனியார் பேருந்தில், சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது பஸ் ஊழியர்கள் இடம் இருந்தால் உட்காரவும், இல்லையென்றால் வேறு பஸ்சில் வருமாறு கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் பஸ்சை மறித்து பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பயணிகள் பரிதவித்து போனார்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலையில் கோவைக்கு ஏராளமானோர் வேலைக்காகவும், கல்லூரி செல்லவும், மற்ற தேவைகளுக்காகவும் தினசரி சென்று வருகிறார்கள். பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு கோவைக்கு செல்ல ஒரு தனியார் பேருந்து செல்வதற்கு தயாராகி கொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் கோவைக்கு செல்வதற்கு பேருந்தில் ஏறினார். அப்போது அந்த தனியார் பேருந்தில் 3 பேர் அமரக் கூடிய ஒரு சீட்டில் ஒரு பெண் மட்டும் உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த சீட்டில் பஸ்சில் ஏறிய மற்றொரு பெண் உட்கார முயன்றுள்ளார்.

அப்போது 2 பேர் வருவார்கள்.. கடைக்கு சென்று இருப்பதாக, உட்கார்ந்து இருந்த பெண் கூறினாராம். இதனால் பஸ்சில் ஏறிய பெண்ணுக்கும், சீட்டில் இருந்த பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அந்த தனியார் பேருந்து ஊழியர்கள் இடம் இருந்தால் உட்காருங்கள்… இல்லையென்றால் வேறு பஸ்சில் வருமாறு கூறினார்களாம்.. இதனால் பேருந்தில் இடம் கிடைக்காத பெண், ஆத்திரத்துடன் கீழே இறங்கி சென்றதுடன், பஸ்சின் முன்னால் சென்று வழி மறித்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் தம்பியும் வந்து பஸ்சை மறித்தது போகவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பின்னால் வந்த பேருந்துகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் நேரமான காரணத்தால் அவதியடைந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொள்ளாச்சி பேருந்துநிலையத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு உடனடினாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு பேருந்துக வழக்கம் போல் மீண்டும் இயங்கின. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண், அவரது தம்பியை போலீசார் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் . விசாரணையில் பொள்ளாச்சி-கோட்டூர் ரோட்டை சேர்ந்த அந்த பெண், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் பஸ் கண்டக்டர் கவுதம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண், அவரது தம்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். எனினும் இரண்டு பேரையும் போலீசார் உடனடியாக ஜாமீனில் விடுவித்தனர்.