திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் நல்ல மனிதராகவும், தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவராகவும், தொகுதி பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவராகவும் குறிப்பாக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு பெற்றுத்தரும் வல்லமை பெற்றவராக இருந்து வருகிறார்.

சி.மகேந்திரன் 2014-2019 வரை பொள்ளாச்சி மக்களவை உறுப்பினராக பணியாற்றியபோது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றினார். குறிப்பாக, பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தையும், தமிழகத்திலேயே முதன் முதலாக பொள்ளாச்சி-திண்டுக்கல் விபத்து அபாயமற்ற அதிவேக விரைவுச் சாலை திட்டத்தையும் பெற்றுத்தந்தார்.

சி.மகேந்திரன் மக்களவையில் பலமுறை கோரிக்கை வைத்ததின் பயனாக உடுமலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதோடு, திண்டுக்கல்-பழநி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ராகல்பாவி புறவழிச்சாலை பிரிவுக்கு அருகில் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை பள்ளி அமைப்பதற்காக இலவசமாக வழங்கினார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். தற்போது ராஜேந்திரா சாலையிலுள்ள அரசு பள்ளியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தற்காலிமாக செயல்பட்டு வருகிறது. சி.மகேந்தின் எம்எல்ஏ, இலவசமாக அளித்த 5 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் கூறும்போது, பள்ளிக்கு அனுமதியை மட்டும் பெற்றுக் கொடுத்துவிட்டு தன் கடமை முடிந்து விட்டது என்றில்லாமல் பள்ளி அமையும் இடத்திற்கு நிலத்தையும் இலவசமாக அளித்தது மிகவும் போற்றக்கூடியது. பள்ளிக்கு அனுமதி கிடைத்தாலும், மத்திய அரசு பள்ளி அமையும் இடத்திற்கான இடம் தேர்வு, நிலத்தின் விலை, நிலத்தின் சுற்றுப்புறம் போன்றவைகள் தொடர்பான பரிசீலனைக்கே சில காலம் ஆகும். ஆனால் சி.மகேந்திரன் எம்எல்ஏ அனுமதியையும் பெற்றுக்கொடுத்து, நிலத்தையும் இலவசமாக கொடுத்துவிட்டதால் பள்ளி கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு மிகவும் எளிதாகிவிட்டது. மேலும் புறவழிச்சாலை அருகிலேயே பள்ளி அமைந்துள்ளதால் போக்குவரத்திற்கும் சுலபமாக இருக்கிறது என்றார்.
உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி வரலாற்றில் எம்எல்ஏ சி.மகேந்திரன் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றால் அது மிகையல்ல..