கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். 7ம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகை குறித்து பாடம் என்பது தேவையில்லாத ஒன்று என்று அவர்கள் சாடியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரே சமச்சீர் பாடத்திட்டம் தான். ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. தனியார் பள்ளிகளே தங்கள் பாடத் திட்டங்களை வடிவமைத்துக் கொள்கிறது.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்



இதற்கிடையே கர்நாடக மாநிலம் ஹெப்பாலில் உள்ள சிந்தி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதாவது தங்கள் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் நடிகை தமன்னா பற்றிய பாடம் இடம் பெற்று இருந்ததால் இது தொடர்பாக அவர்கள் புகார் அளித்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலும் சமீபத்தில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த தனியார் பள்ளியில் வழங்கப்பட்ட புத்தகத்தில் தமன்னா பற்றிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இது தெரிய வந்ததும் அதிருப்தி அடைந்த பெற்றோர், இது தொடர்பாக முதலில் பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும், பள்ளி நிர்வாகம் இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார்: நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த பெற்றோர், இது தொடர்பாகக் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கர்நாடக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த குறிப்பிட்ட பாடத்தில் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட சிந்தி சமூகத்தில் இப்போது வெற்றிகரமாக இருக்கும் பலரைக் குறித்த கருத்துகள் இடம் பெற்று இருக்கிறது.

ஆனால், அது குறித்து எல்லாம் பொதுமக்கள் எதுவும் சொல்லவில்லை. தமன்னா தொடர்பான கருத்துகள் இருப்பதற்கே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்ன பாடம்: அந்த பள்ளியில் 7ஆம் வகுப்பிற்கு வழங்கப்பட்ட பாடத்தில் சிந்திகள் பற்றிய அத்தியாயம் ஒரு பாடமாகவே இடம்பெற்று இருக்கிறது. “பிரிவினைக்குப் பின் வாழ்க்கை: சிந்துவில் இடம்பெயர்வு 1947 முதல் 1962 வரை” என்ற தலைப்பில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. சிந்தி பிரிவினர் மொழியியல் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது. அதில் தமன்னா குறித்த கருத்துகள் இருப்பதே சர்ச்சைக்குக் காரணம்.

இது தொடர்பாகப் புகார் அளித்த பெற்றோர்களில் ஒருவர் கூறுகையில், “எங்கள் குழந்தைகள் மற்றொரு கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் எங்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் 7ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நடிகையைப் பற்றி பாடம் இருப்பது ஏன்.. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார். இது தொடர்பாகப் பிரச்சினை செய்தால் டிசி கொடுத்துவிடுவோம் எனப் பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாகவும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

பெற்றோர்கள் மேலும் கூறுகையில், “திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய பிரபலங்கள் குறித்து எங்கள் குழந்தைகள் தாராளமாகப் படிக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் இதுபோல நடிகையைக் குறித்துத் தெரிந்து கொண்டால், பிறகு அவர்கள் இணையத்தில் இது குறித்துத் தேடுவார்கள். இதனால் அவர்கள் தேவையில்லாத கண்டெண்டுகளை பார்க்க நேரிடலாம்” என்று அவர் தெரிவித்தார். என்ன செய்ய வேண்டும்: இது தொடர்பாக இது தொடர்பாக விவரம் அறிந்த சிலர் கூறுகையில், “பள்ளி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்த பிறகு கூடுதலாக எதாவது ஒரு விஷயத்தைச் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, அதை நீக்குவதாக இருந்தாலும் சரி அதற்கு அந்த பள்ளி இருக்கும் வாரியம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். எனவே, முதலில் பெற்றோர் அந்த வாரியத்திடம் இது தொடர்பாகப் புகார் அளிக்க வேண்டும்” என்றார்.